அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அரசு நிர்வாகத்திற்கும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கும் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழக வளாகத்தில் அமெரிக்க எதிர்ப்பு, தீவிரவாத ஆதரவு நடவடிக்கைகளில் வெளிநாட்டு மாணவர்கள் ஈடுபடுவதற்கு நிர்வாகம் அனுமதி அளிப்பதாக அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசு குற்றம்சாட்டி வந்தது. தவிர, அதை நிறுத்தும்படி ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கும் சில உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது. ஆனால், இதை, பல்கலை ஏற்க மறுத்தது. இதையடுத்து ட்ரம்ப் நிர்வாகம், ஹார்வர்டு பல்கலைக்கு வழங்கப்பட்டு வந்த, 18,500 கோடி ரூபாய் நிதியுதவியை நிறுத்தியது.
இதுதொடர்பாக, ட்ரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக ஹார்வர்டு பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்தது. இதனால் கோபமடைந்த ட்ரம்ப், ஹார்வர்டு பல்கலைக்கு வழங்கப்பட்ட வரி விலக்குச் சலுகையையும் ரத்து செய்தார். நிதி திண்டாட்டாத்தால் அப்பல்கலை, பேராசிரியர்கள் பலரை பணியிலிருந்து நீக்கியது. இந்த நிலையில் அடுத்த அதிரடியாய், ஹார்வர்டு பல்கலைக்கழகம் வௌிநாட்டு மாணவர்களைச் சேர்ப்பதற்கான அங்கீகாரத்தை அமெரிக்க அரசு ரத்து செய்தது. ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஹார்வர்டு பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், ட்ரம்பின் உத்தரவை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. எனினும், அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கை மூலமாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக அதிபர் ட்ரம்ப் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஹார்வர்டு பல்கலைக்கழகம், தங்கள் மாணவர்களில் கிட்டத்தட்ட 31% பேர் வெளிநாட்டு நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று ஏன் கூறவில்லை? ஆனால் அமெரிக்காவுடன் நட்புறவு கொள்ளாத சில நாடுகள், தங்கள் மாணவர்களின் கல்விக்கு எதுவும் செலுத்துவதில்லை. அவர்கள் ஒருபோதும் அதைச் செய்ய விரும்புவதும் இல்லை.
யாரும் எங்களிடம் அதைச் சொல்லவில்லை. அந்த வெளிநாட்டு மாணவர்கள் யார் என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம். இது ஒரு நியாயமான கோரிக்கை. ஏனெனில், நாங்கள் ஹார்வர்டுக்கு பில்லியன் கணக்கான டாலர்களை வழங்குகிறோம். ஆனால் ஹார்வர்டு சரியாகச் சொல்வதில்லை. அவர்கள் யார் என்பது பற்றிய பெயர்களை எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். ஹார்வர்டுக்கு இன்னும் டாலர் 52,000,000 நிதி உள்ளது. அதைப் பயன்படுத்துங்கள். மேலும் மத்திய அரசு உங்களுக்கு தொடர்ந்து பணம் வழங்க வேண்டும் என்று கேட்பதை நிறுத்துங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
2024ஆம் ஆண்டில் டாலர் 53.2 பில்லியன் மதிப்புள்ள அறக்கட்டளையுடன் ஹார்வர்டு பல்கலை, அமெரிக்காவின் பணக்கார பல்கலைக்கழகமாக உள்ளது. இது 2024-2025ஆம் கல்வியாண்டில் கிட்டத்தட்ட 6,800 சர்வதேச மாணவர்களைச் சேர்த்துள்ளது. இது, பல்கலைக்கழக புள்ளிவிவரங்களின்படி அதன் மொத்த சேர்க்கையில் 27 சதவீதமாகும். 2022ஆம் ஆண்டில், சீன நாட்டினர் 1,016 பேர் வெளிநாட்டு மாணவர்களாக இருந்ததாக பல்கலைக்கழக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அதைத் தொடர்ந்து கனடா, இந்தியா, தென் கொரியா, பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இடம்பெற்றனர். இந்தியாவிலிருந்து 788 மாணவர்கள் படிப்பதாக இன்னொரு அறிக்கை ஒன்று கூறுகிறது. ஹார்வர்டு பல்கலைக்கு, இந்த தடைக்கு அமல்படுத்தப்பட்டால், அது பெரிய அளவில் நிதி அபாயத்தை இழக்கும் என்று கூறப்படுகிறது. காரணம், அப்பல்கலை ஆண்டுக்கு பல்லாயிரக்கணக்கான டாலர்களை கல்விக் கட்டணமாக வசூலிக்கிறது எனக் கூறப்படுகிறது.