ஹார்வர்டு பல்கலைக்கு ட்ரம்ப் பிறப்பித்த அதிரடி உத்தரவு.. தடை போட்ட நீதிமன்றம்!
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அரசு நிர்வாகம் அங்குள்ள பல்கலைகளுக்கும் அதிரடி உத்தரவு பிறப்பித்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழக வளாகத்தில் அமெரிக்க எதிர்ப்பு, தீவிரவாத ஆதரவு நடவடிக்கைகளில் வெளிநாட்டு மாணவர்கள் ஈடுபடுவதற்கு நிர்வாகம் அனுமதி அளிப்பதாக அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசு குற்றம்சாட்டி வந்தது. தவிர, அதை நிறுத்தும்படி ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கும் சில உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது. இதை, பல்கலை ஏற்க மறுத்தது.
இதையடுத்து ட்ரம்ப் நிர்வாகம், ஹார்வர்டு பல்கலைக்கு வழங்கப்பட்டு வந்த, 18,500 கோடி ரூபாய் நிதியுதவியை நிறுத்தியது. இதுதொடர்பாக, ட்ரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக ஹார்வர்டு பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்தது. இதனால் கோபமடைந்த ட்ரம்ப், ஹார்வர்டு பல்கலைக்கு வழங்கப்பட்ட வரி விலக்குச் சலுகையையும் ரத்து செய்தார். நிதி திண்டாட்டாத்தால் அப்பல்கலை, பேராசிரியர்கள் பலரை பணியிலிருந்து நீக்கியது.
இந்த நிலையில், வெளிநாட்டு மாணவர்களை அப்பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கு அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் தடை விதித்து உள்ளது. அதாவது, ஹார்வர்டு பல்கலைக்கழகம் வௌிநாட்டு மாணவர்களைச் சேர்ப்பதற்கான அங்கீகாரத்தை அமெரிக்க அரசு ரத்து செய்துள்ளது. அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கை மூலமாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது இப்பல்கலைக்கழகத்தில் உலகம் முழுவதிலும் இருந்து மொத்தம் 10,158 மாணவர்கள் படித்து வருகின்றனர். ஹார்வர்டு புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவைச் சேர்ந்த சுமார் 788 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் பல்கலைக்கழகத்தைவிட்டு வெளியேறக்கூடிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஹார்வர்டு பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், ட்ரம்பின் உத்தரவை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.