ரஷ்யாவின் இரு பெரும் எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் மற்றும் லுகோயில் ஆகியவற்றுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில், ரஷ்யாவின் இரு பெரும் எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் மற்றும் லுகோயில் ஆகியவற்றுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. ரஷ்ய அரசுக்கு வருவாய் ஈட்டித் தருவதில் இவ்விரு நிறுவனங்களும் மிக முக்கியமானவை என்ற நிலையில், அவற்றை ட்ரம்ப் அரசு குறிவைத்துள்ளது. போர் நிறுத்தத்திற்கான முக்கியப் படியாக புதிய தடைகள் விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்யா போரை நிறுத்த ஒப்புக்கொண்டால், அவற்றை விரைவாக நீக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார். என்றாலும் இத்தடைகள் மூலம் உக்ரைன் மீதான போரை தொடர்வதற்கான நிதி ஆதாரங்கள் ரஷ்யாவுக்கு வெகுவாக குறையும். இதைத் தொடர்ந்து ஐரோப்பிய யூனியனும் சில தடைகளை ரஷ்யா மீது விதித்துள்ளது. மேலும், அமெரிக்காவும் ரஷ்யாவும் முன்வைத்துள்ள அமைதிக்கான பேச்சுவார்த்தையில் வேறுபட்ட கருத்துகள் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், இந்த தடைகள் வளர்ந்து வரும் நாடுகளின் எரிசக்தி, அதாவது எண்ணெய் மற்றும் எரிவாயு பாதுகாப்பை பாதிக்கும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள ரோஸ்நெஃப்ட் மற்றும் லுகோயில் ஆகிய இரண்டு ரஷ்ய நிறுவனங்களும் தினசரி சுமார் 3.1 மில்லியன் பீப்பாய் எண்ணெயை ஏற்றுமதி செய்கின்றன. இதில் ரோஸ்நெஃப்ட் மட்டும் ரஷ்யாவின் மொத்த எண்ணெய் உற்பத்தியின் கிட்டத்தட்ட பாதியை வழங்குகிறது. இது உலகளாவிய எண்ணெய் உற்பத்தியில் சுமார் 6 சதவீதம் ஆகும். ரோஸ்நெஃப்ட், வருவாய் அடிப்படையில் அந்நாட்டின் இரண்டாவது பெரிய நிறுவனமாகும். எரிவாயு நிறுவனமான காஸ்ப்ரோமுக்கு அடுத்தபடியாக, ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் பொருளாதாரத் தடைகள் மற்றும் எண்ணெய் விலை வீழ்ச்சியால் அது கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. செப்டம்பரில், 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் நிகர வருமானத்தில் ஆண்டுக்கு ஆண்டு 68 சதவீதம் சரிவு ஏற்பட்டதாக அது தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் மூன்றாவது பெரிய நிறுவனமும் அதன் மிகப்பெரிய அரசு சாரா நிறுவனமுமான லுகோயில், 2024ஆம் ஆண்டில் லாபத்தில் 26.5 சதவீத சரிவைப் பதிவு செய்தது.