ட்ரம்ப் - ஜின்பிங் pt
உலகம்

பதிலுக்குப் பதில் வரி | அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர்.. இந்தியாவுக்குப் பாதிப்பு?

அமெரிக்கா - சீனா இடையே நிலவும் வர்த்தகப் போரால், இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Prakash J

பதிலுக்குப் பதில் வரிவிதிக்கும் அமெரிக்கா - சீனா

அதிபராக பொறுப்பேற்றது முதல், அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையுடன் செயல்பட்டுவரும் ட்ரம்ப், தற்போது உலக நாடுகளுக்கு வரிவிதிப்பின் மூலம் அன்றாடம் தலைப்புச் செய்திகள் இடம்பிடித்து வருகிறார். சமீபத்தில் உலக நாடுகளுக்கு பரபஸ்பர வரிவிதிப்பை ட்ரம்ப் அமல்படுத்தியிருந்தார். கடந்த 9ஆம் தேதி முதல் அந்த வரிவிதிப்பு தொடங்க வேண்டிய நிலையில், வணிகப் போர், சர்வதேச பங்குச் சந்தைகளின் சரிவு, உலகளாவிய பொருளாதார மந்த நிலை போன்றவற்றின் காரணமாக அதை 90 நாட்களுக்கு ட்ரம்ப் நிறுத்திவைத்துள்ளார். எனினும், இந்தப் பட்டியலில் சீனாவைத் தவிர்த்துள்ளார். அந்த நாட்டுக்கு தொடர்ந்து வரிவிதிப்பையும் உயர்த்தி வருகிறார்.

ட்ரம்ப், ஜின்பிங்

சீன பொருட்கள் மீது ஏற்கெனவே 54 சதவீத வரி விதித்திருந்த ட்ரம்ப், மேலும் 50 சதவீத வரி விதித்தார். அதற்கு பதிலடியாக அமெரிக்க பொருட்கள் மீது சீனா 84 சதவீத வரி விதித்தது. சீனாவின் பதிலடியால் கடும் கோபம் அடைந்த, அதிபர் ட்ரம்ப் சீன பொருட்களுக்கான இறக்குமதி வரி 125 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அறிவித்தார். தற்போது, சீனா மீது 20 சதவீதம் ட்ரம்ப் கூடுதல் வரிகளை விதித்து உள்ளார். இதனால், மொத்த வரி இப்போது 145 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. சீன பொருட்களுக்கான வரிகளை 145 சதவீதமாகக் கடுமையாக உயர்த்துவதன் மூலம், சீனாவுடனான தற்போதைய வர்த்தகப் போரை ட்ரம்ப் தீவிரப்படுத்தியதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

அமெரிக்க அதிபரைக் கிண்டலடிக்கும் சீனா

மறுபுறம், சீனப்பொருட்களுக்கான வரியை அமெரிக்கா 145% ஆக உயர்த்திய நிலையில் அதற்கு சீனா, அமெரிக்க பொருட்களுக்கான 125% ஆக அதிகரித்துள்ளது. இதற்கான அறிவிப்பை சீன வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மேலும் வரி உயர்வு விவகாரத்தில் அமெரிக்காவின் செயல்பாடுகளை எதிர்த்து சர்வதேச வர்த்தக அமைப்பிடம் முறையிடப்போவதாகவும் சீனா கூறியுள்ளது. இதன்மூலம் அமெரிக்காவும் சீனாவும் பதிலுக்கு பதில் வரி விதிப்பது தொடர்கதையாகி வரும் நிலையில், அமெரிக்காவின் வரிவிதிப்பு சீனாவில் கேலிப்பொருளாக மாறியுள்ளது.

TRUMP Tarrif

சீனர்கள் பலரும் சமூக தளங்களில் ட்ரம்ப்பை கேலி செய்து மீம்களை பதிவிட்டு வருகின்றனர். மேக் அமெரிக்கா கிரேட் அகெய்ன் என்ற தொப்பி கூட சீனாவில் தயாரிக்கப்பட்டதாகத்தான் இருக்கும் என்றும் ட்ரம்ப்பின் அறிவிப்பால் அவற்றின் விலை உயரும் என்றும் மீம்கள் பகிரப்பட்டு வருகின்றன. சீனாவை சார்ந்திருக்காமல் உள்நாட்டிலேயே பொருட்களை உற்பத்தி செய்வோம் என ட்ரம்ப் கூறியதை கலாய்த்தும் மீம்கள் பகிரப்படுகின்றன. தொழிற்சாலை ஒன்றில் ட்ரம்ப் காலணி தயாரிப்பதை போன்றும் ஆடை தொழிற்சாலையில் தைப்பது போன்றும் உள்ள படங்கள் சமூக தளங்களில் வலம் வருகின்றன.

அமெரிக்கா - சீனா வரிவிதிப்பு: இந்தியாவுக்குப் பாதிப்பா?

இன்னொரு புறம், சீன பொருட்களுக்கு அமெரிக்கா நாளுக்கு நாள் வரியை உயர்த்தி வருவது இந்தியாவையும் கவலையடையச் செய்துள்ளது. 145% வரி விதிக்கப்பட்டுள்ளதால் சீன பொருட்களுக்கான அமெரிக்க சந்தை ஏறக்குறைய மூடப்பட்டுவிட்டது என்றே தெரிகிறது. இதையடுத்து சீனா தங்கள் பொருட்களை விற்க இந்தியா போன்ற சந்தைகளை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சீனா இரும்பு பொருட்களை இந்தியாவில் அதிகளவு குவிக்க வாய்ப்புள்ளதாக சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்தியாவில் இரும்புத்தொழில் ஏற்கனவே நலிவில் உள்ள நிலையில் சீன தயாரிப்புகள் குவிவது நிலைமையை மேலும் மோசமாக்கும் எனக் கருதப்படுகிறது. எனவே சீன இரும்பு பொருட்கள் குவிவதை தடுக்க 20% பொருட்குவிப்பு தடுப்பு வரி விதிக்க இந்தியா பரிசீலித்து வருகிறது. இதற்கு முன்னதாக விரிவான விவரங்களை சம்மந்தப்பட்ட தொழில் நிறுவனங்களிடம் இருந்து மத்திய இரும்பு மற்றும் எஃகுத்துறை கேட்டுள்ளது.