வரிவிதிப்பு | உலகத் தலைவர்கள் கெஞ்சுவதாக ட்ரம்ப் கிண்டல் பேச்சு!
அதிபராக பொறுப்பேற்றது முதல், அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையுடன் செயல்பட்டுவரும் ட்ரம்ப், வர்த்தக ரீதியாக அமெரிக்காவால் பல நாடுகள் ஆதாயம் அடைந்து வருவதாகவும், அதே அளவு பலன் அவர்களால் தங்கள் நாட்டிற்கு கிடைக்கவில்லை என்றும் கூறி வந்தார். இதையடுத்து சீனா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் அதிக வரிவிதிப்பையும் மேற்கொண்டார். மேலும், பிற நாடுகள் தங்களுக்கு எந்த விகிதத்தில் வரி விதிக்கின்றனவோ, அதே விகிதத்தில் அந்த நாடுகளின் பொருள்கள் மீதும் (பரஸ்பர) வரி விதிக்கப்போவதாகவும் எச்சரித்திருந்தார். இதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் முடிவை அமல்படுத்தினார். அதில், பிற நாடுகள் தங்கள் பொருள்கள் மீது விதிக்கும் வரி விகிதத்தை சற்றே குறைத்து, ‘தள்ளுபடி’ வரி விகிதங்களை ட்ரம்ப் வெளியிட்டாா். ட்ரம்பின் இந்த வரி விதிப்பு அறிவிப்பால் சர்வதேச அளவில் வர்த்தகப் போர் ஏற்படும் அபாயமும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் ஏற்படும் அபாயமும் இருப்பதாக பொருளதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், அமெரிக்காவுடன் வணிக ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக தன்னை தொலைபேசியில் அழைக்கும் உலக நாட்டுத் தலைவர்கள் பலரும் உயிரை விடுவதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். குடியரசுக் கட்சி உறுப்பினர்களுடன் நடைபெற்ற இரவு விருந்து நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ”எந்த நாட்டின் பெயரையும் குறிப்பிட்டுச் சொல்லாமல், ’தயவு செய்து, தயவு செய்து சார்.. எங்களுடன் ஒப்பந்தம் வைத்துக்கொள்ளுங்கள். நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்கிறோம்’ என்று கூறுகிறார்கள். நான், எந்தமாதிரியா மோசமான விஷயத்தை செய்துகொண்டிருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். நான் என்ன செய்கிறேன் என்று உங்களுக்கும் தெரியும். அதனால்தான் நீங்கள் எனக்கு வாக்களித்தீர்கள்” எனத் தெரிவித்துள்ளார். இது, உலக தலைவர்களிடம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.