கடந்த பிப்ரவரி 28-ம் அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் முன்னாள் உச்சத்தலைவர் அயதுல்லா அலி காமேனி உட்பட பல முக்கிய நிர்வாகிகள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, மத்தியக் கிழக்கில் தொடங்கியா போர், 3 மாதங்களுக்கு மேலாக நீடித்து வந்த நிலையில் பாகிஸ்தான், கத்தார் உள்ளிட்ட நாடுகளின் முயற்சியால், அமெரிக்காவும் ஈரானும் ஜூன் 17 அன்று போர் நிறுத்தத்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றனர். இதையடுத்து, வளைகுடா பகுதியில், ஓரளவுக்கு அமைதி திரும்பியிருக்கும் நிலையில், போரின் காரணமாக மூடப்பட்ட ஹார்முஸும் திறக்கப்பட்டிருக்கிறது.
எனினும், இந்தப் புரிந்துணர்வு முயற்சிகள் ஈரானின் அணுசக்தி திட்டத்தை போதுமான அளவில் கட்டுப்படுத்தவில்லை என்ற கவலையை இஸ்ரேல் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது.
இந்த சூழலில் தான், ஈரான் அமெரிக்கா இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையில் முக்கியப் பங்கு வகிக்கும் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பகர் காலிபாப், வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கொலை செய்யத் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்கா உளவுத் துறைக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஓமன், கத்தார் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் மூலம் ஈரான் அதிகாரிகளுக்கு, பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்ளவும், உயர்மட்ட தலைவர்களின் நகர்வுகளில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்கவும் அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த எச்சரிக்கையின் முக்கிய நோக்கம், போர் நிறுத்த பேச்சுவார்த்தையை பாதுகாப்பதுதான் என்று கூறப்படுகிறது. ஏனெனில், இந்த நேரத்தில் ஈரானின் முக்கிய தலைவர் ஒருவர் கொல்லப்பட்டால், பேச்சுவார்த்தை உடனடியாக முறிந்துவிடும். அதோடு, ஈரான் நேரடியாக இஸ்ரேலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கக்கூடும். அதனால் மத்திய கிழக்கு முழுவதும் மீண்டும் போர் தீவிரமடையும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஏற்கனவே, போர் தொடங்கிய காலக்கட்டத்தில் இருந்து, அமெரிக்கா ஈரானின் கப்பற்படை மற்றும் ஏவுகணைப்படைகளை இலக்காக கொண்டிருந்த வேளையில், இஸ்ரேல் முடிந்தவரை ஈரானின் மூத்த தலைவர்களை கொல்லும் நோக்கத்துடன் செயல்பட்டது. போரின் தொடக்கத்தில் கொல்லப்பட்டவர்களில், ஈரானின் உயர்மட்ட தேசியப் பாதுகாப்பு அதிகாரியான அலி லாரிஜானி மற்றும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான கமல் கராசி ஆகியோரும் அடங்குவர். இவர்கள் இருவரும், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பிய தலைவர்களாகக் கருதப்பட்டனர் எனவும் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தச் சூழலில்தான், ஈரானின் தற்போதைய உயர்மட்ட அரசியல் மற்றும் பாதுகாப்பு நிர்வாகிகளை இஸ்ரேல் குறிவைத்து கொலை செய்யத் திட்டமிட்டிருக்கலாம் என்ற உளவுத் தகவல் அமெரிக்காவுக்கு கிடைத்ததைத் தொடர்ந்து, ஈரானுக்கு ரகசிய எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.