\
Venezuela Mall Collapse: Man Rescued After 8 Days
Venezuela Earth QuakePt web

வெனிசுலா | இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிய செக்யூரிட்டி.. 8 நாட்களுக்குப்பின் உயிருடன் மீண்ட அதிசயம்!

வெனிசுலாவில் இரட்டை நிலநடுக்கத்தால் இடிந்த ‘கலெரியாஸ் பிளாயா கிராண்டே’ வணிக வளாக இடிபாடுகளுக்குள் 8 நாட்கள் சிக்கிய 43 வயது பாதுகாப்பு அதிகாரி ஹெர்னான் ஆல்பெர்டோ கில் புளோரஸ் உயிருடன் மீட்கப்பட்ட நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Published on

வெனிசுலாவில் கடந்த வாரம் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தின்இடிபாடுகளுக்குள், கடந்த 8 நாட்களாகச் சிக்கியிருந்த 43 வயது பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இந்த மீட்புச் சம்பவம், பேரழிவைச் சந்தித்த வெனிசுலா மக்களுக்குப் பெரும் நம்பிக்கையையும் நெகிழ்ச்சியையும் தந்துள்ளது. ஹெர்னான் ஆல்பெர்டோ கில் புளோரஸ் என்ற அந்த நபர், லா குவைரா கடலோரப் பகுதியில் உள்ள 'கலெரியாஸ் பிளாயா கிராண்டே' வணிக வளாகத்தில் இரவு நேரப் பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஜூன் 24 அன்று நிலநடுக்கம் ஏற்பட்டபோது, அவர் தனது சிறிய பாதுகாப்பு கேபினுக்குள் இருந்துள்ளார். சுற்றியிருந்த பெரிய கான்கிரீட் கட்டிடம் இடிந்து விழுந்தபோதும், அந்தச் சிறிய கேபின் மட்டும் உடையாமல் தாக்குப் பிடித்துள்ளது. இதுவே அவர் மீது இடிபாடுகள் விழாமல் தடுத்து, சுவாசிப்பதற்கான காற்றையும் வழங்கி அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளது.கோஸ்டாரிகா நாட்டின் செஞ்சிலுவைச் சங்க மீட்புக் குழுவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடிபாடுகளுக்குள் இருந்து வந்த சத்தத்தை வைத்து அவர் உயிருடன் இருப்பதை முதன்முதலில் கண்டுபிடித்தனர். அப்போது அவர் மீட்புக் குழுவினரிடம், "ஒருவேளை நான் இங்கிருந்து உயிருடன் மீட்கப்படாமல் இறந்துவிட்டால் என் மனைவி தாங்க மாட்டார், எனவே நான் உயிருடன் இருக்கும் விஷயத்தை இப்போதைக்கு அவரிடம் சொல்ல வேண்டாம்" என்று உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.

சிலி நாட்டின் தீயணைப்பு வீரர்கள், அமெரிக்கா, போர்ச்சுகல், மெக்சிகோ மற்றும் கோஸ்டாரிகா ஆகிய நாடுகளின் சர்வதேச மீட்புக் குழுவினர் இரவு பகலாக இணைந்து இந்த மீட்புப் பணியைச் சாத்தியமாக்கியுள்ளனர். 8 நாட்களுக்குப் பிறகு அவர் பத்திரமாக வெளியே கொண்டுவரப்பட்டதைக் கண்ட அவரது மனைவி கஸ்பிமார் கோன்சலஸ், "பல நாட்கள் நம்பிக்கையிழந்து தவித்தேன், அவர் உயிருடன் இருக்கிறார் என்ற செய்தி இருண்ட என் வாழ்க்கையில் ஒரு ஒளிக் கீற்றாக வந்துள்ளது" என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இந்தத் தம்பதிக்கு 8 மற்றும் 10 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Venezuela Mall Collapse: Man Rescued After 8 Days
விண்வெளி கழிவுகளால் ஆபத்து; எலான் மஸ்கின் புதிய திட்டம் - அதிர்ச்சித் தரவுகள்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com