பல்வேறு ரசாயன ஆயுதங்களை வைத்துள்ளதாக குற்றம் சாட்டியும், குவைத் மீதான இராக்கின் ஆக்கிரமிப்பை காரணம் காட்டியும் கடந்த 2003-ம் ஆண்டு இராக் மீது அமெரிக்கா படையெடுத்தது. அதன் பின்னர் ஈராக்கை ஆண்ட அப்போதைய அதிபர் சதாம் உசேன் ஆட்சியை வீழ்த்திய அமெரிக்க படைகள் அந்த நாட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டுவந்தன.
இதனிடையே ஈராக் நீதிமன்றத்தால் சதாம் உசேன் மீதான மனித உரிமை மீறல் வழக்குகள் விசாரிக்கப்பட்டு, 2006 டிசம்பர் 30 அன்று அவருக்குத் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது. சதாம் உசைனின் வீழ்ச்சிக்குப் பிறகு, ஈராக்கில் அமெரிக்க ஆதரவுடன் ஒரு புதிய ஜனநாயகக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
ஆனால், அது பெரும் பிரிவினையை ஏற்படுத்திய நிலையில், அங்கு பல்வேறு குழுக்களுக்கும் இடையே உள்நாட்டு போர் ஏற்பட்டது. அப்போதில் இருந்து ஈராக்கின் அமைதியை நிலைநிறுத்துவதாக கூறி அங்கு அமெரிக்க படைகள் தொடர்ந்து நிலைகொண்டன.
ஆனால் அமெரிக்க படைகள் ஈராக்கில் நிலைகொண்டிருப்பதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், 2011-ம் ஆண்டில் அமெரிக்கா தனது பெரும்பாலானப் படைகளை ஈராக்கில் இருந்து வாபஸ் பெற்றது. இருப்பினும், அந்நாட்டு பாதுகாப்புப் படைகளுக்குப் பயிற்சி அளிக்கவும், பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்காகவும் சில அமெரிக்க ராணுவப் பிரிவினர் அங்கு தொடர்ந்து முகாமிட்டுள்ளனர்.
இந்த நிலையில், 23 ஆண்டுகளுக்கு பிறகு ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதுமாக வெளியேறும் என்ற அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார். வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈராக் பிரதமர் அலி அல் சைதி ஆகியோர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த ஈராக் பிரதமர் செப்டம்பர் 30 அன்று அமெரிக்கப் படைகள் ஈராக்கை விட்டு வெளியேறும் என்ற உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அதன் பின்னர் பேசிய டிரம்ப், ஈராக்கில் இனி அமெரிக்க ராணுவத்தின் தேவை இருக்காது என்பதால், அமெரிக்கப் படைகள் வெளியேறும் என்று கூறியுள்ளார். மேலும் இராக்கில் ராணுவ உறவுகளிலிருந்து விலகி இனி, வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளில் இரு நாடுகளும் கவனம் செலுத்த இருக்கின்றன என்றும், அமெரிக்காவின் எண்ணெய் நிறுவனங்கள் இனி ஈராக்கில் காலடி எடுத்து வைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.