இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக புகார் அதானிக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்த அமெரிக்க நீதித் துறை வழக்குகளை கைவிட அமெரிக்கா முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு, ரூ.2,239 கோடி ($265 மில்லியன்) லஞ்சம் கொடுக்க கவுதம் அதானி முன்வந்ததாகக் கூறி அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்தது. இந்த லஞ்சம் 2020 முதல் 2024 வரை கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக, அதானி தனிப்பட்ட முறையில் சந்தித்து, லஞ்சம் தருவது தொடர்பாகப் பேசியதாகவும், அதேபோல், அதிகாரிகளுடன் சாகர் அதானி தொலைபேசியில் பேசியதாகவும் அதற்கான ஆதாரங்களை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
அதானியின் இந்தச் செயல் வெளிநாட்டு முதலீட்டு சட்டப்படி தவறானது எனக்கூறி நியூயார்க்கில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கவுதம் அதானி தவிர அவர் உறவினர் சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் உள்ளிட்ட 6 பேர்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன.
அதானிக்கு எதிரான வழக்குகளை அமெரிக்கா கைவிட முடிவுசெய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இதுதொடர்பாக பிரதமர் மோடியை காங்கிரஸ் விமர்சித்துள்ளது. ஒருதலைபட்சமான இந்திய -அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்துக்கு பிரதமர் ஏன் ஒப்புக்கொண்டார் என்பதும், நாட்டின் நலன்களைக் கருத்தில்கொள்ளமால் ட்ரம்பின் மிரட்டல்களுக்குப் பயந்து, ஆபரேஷன் சிந்தூரை ஏன் திடீரென நிறுத்தினார் என்பதும் தற்போது தெளிவாவதாக காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். பிரதமர் எந்தளவுக்கு சமரசம் செய்துகொள்வார் எனவும் அவர் வினவியுள்ளார்.
இதே புகாரில் அமெரிக்க பங்கு பரிவர்த்தனை ஆணையமும் கவுதம் அதானி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை அதானி குழுமம் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அதானிக்கு எதிரான வழக்குகளை கைவிட அமெரிக்கா முடிவு செய்திருப்பதாக, அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதானியின் இந்த வழக்குகளை கைவிட இரு அமைப்புகளும் நடவடிக்கை எடுத்து வருவதாக, நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வழக்குகளில் வாதாடுவதற்காக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் தனிப்பட்ட வழக்கறிஞர் ராபர்ட் கியூஃப்ராவின் தலைமையில், வழக்கறிஞர் அணியை அதானி நியமித்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக டைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. ராபர்ட் கியூஃப்ரா ஏப்ரலில் அமெரிக்க நீதித்துறை அதிகாரிகளை சந்தித்தாகவும், அப்போது, அதானி மீதான வழக்குகளை கைவிட்டால் அவர் அமெரிக்க பொருளாதாரத்தில் 10 பில்லியன் டாலர்களை முதலீடு செய்வார் என பேசப்பட்டதாகவும் டைம்ஸ் கூறியுள்ளது.