லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரரும், பல உயர்மட்ட குற்றங்களில் தேடப்படும் முக்கிய நபருமான அன்மோல் பிஷ்னோய், அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்பட இருக்கிறார்.
மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் பிரிவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பாபா சித்திக், கடந்த ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி, மும்பை பாந்தரா பகுதியில் 3 பேர் கொண்ட கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே, பாபா சித்திக்கின் படுகொலைக்கு, சிறையில் இருக்கும் பிரபல 'கேங்ஸ்டார்' லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த நிலையில், லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரரும், பல உயர்மட்ட குற்றங்களில் தேடப்படும் முக்கிய நபருமான அன்மோல் பிஷ்னோய், அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்பட இருக்கிறார்.
இவர், பாபா சித்திக் கொலை மற்றும் நடிகர் சல்மான் கானின் மும்பை வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டு வருகிறார். அமெரிக்காவில் தஞ்சமடைந்த அவர், தற்போது ஒருங்கிணைந்த நாடு கடத்தல் நடவடிக்கை மூலம் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். ஒருங்கிணைந்த நாடு கடத்தல் நடவடிக்கைகளில் அமெரிக்கா அரசு 200 இந்தியர்களை திருப்பி அனுப்பியுள்ளது. இதில் அன்மோல் பிஷ்னோயும் ஒருவர். கடந்த ஆண்டு கலிபோர்னியாவில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர், அன்மோல் போலீஸ் காவலில் இருந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதை, மறைந்த பாபா சித்திக்கின் மகனும், என்சிபி தலைவருமான முன்னாள் எம்எல்ஏ ஜீஷான் சித்திக் உறுதிப்படுத்தியுள்ளார். அன்மோல் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டதை உறுதிப்படுத்தும் மின்னஞ்சல் தனக்கு வந்ததாகத் தெரிவித்துள்ளார். தனது குடும்பத்தினர் பாதிக்கப்பட்டவரின் தொடர்பு நிலையை அமெரிக்க நிறுவனங்களில் பதிவு செய்துள்ளதாகவும், இதன்மூலம் அதிகாரப்பூர்வ புதுப்பிப்புகளைப் பெற உரிமை பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். தவிர, அவர் இந்தியாவில் தரையிறங்கியதும் உடனடியாக அவர் கைது செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு மத்திய அரசை ஜீஷான் வலியுறுத்தி உள்ளார்.
இன்னொரு புறம், மகாராஷ்டிராவில் அன்மோலுக்கு எதிராக பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அவரை நாடு கடத்துவதற்காக மும்பை காவல்துறையினர் முன்னர் இரண்டு தனித்தனி திட்டங்களை அனுப்பியதாக உறுதிப்படுத்தினர். அவர் வந்ததும், எந்த நிறுவனம் முதலில் காவலில் எடுக்க வேண்டும் என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்யும் எனக் கூறப்படுகிறது. கும்பல்களுடன் தொடர்புடைய மாநிலங்களுக்கு இடையேயான பயங்கரவாத வலையமைப்புகளைத் தேடி வரும் NIAவிற்கு, அன்மோல் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டிருப்பது ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.