மகாராஷ்டிரா | ”ரூ.10 கோடி தரணும்”.. கொலை செய்யப்பட்ட பாபா சித்திக் மகனுக்கு கொலை மிரட்டல்!
மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் பிரிவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பாபா சித்திக் கடந்த ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி, மும்பை பாந்தரா பகுதியில் 3 பேர் கொண்ட கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே, பாபா சித்திக்கின் படுகொலைக்கு, சிறையில் இருக்கும் பிரபல 'கேங்ஸ்டார்' லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுக் கொண்டது.
இந்த நிலையில், பாபா சித்திக் மகனிடம் ரூ.10 கோடி கேட்டு மர்ம நபர்கள் தற்போது கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த மிரட்டல், இ-மெயில் மூலமாக அடையாளம் தெரியாத ஒருவரின் மின்னஞ்சல் கணக்கில் இருந்து அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
’ரூ.10 கோடி தராவிட்டால் உங்கள் தந்தை பாபா சித்திக்கிற்கு என்ன நடந்ததோ, அதுதான் உங்களுக்கும் நடக்கும்’ என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. கொலை மிரட்டலை அடுத்து, ஜீசன் சித்திக் உடனடியாக மும்பை காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, அவரது வீட்டுக்குச் சென்ற போலீசார் விசாரணையை தொடக்கி உள்ளனர். மின்னஞ்சல் எங்கிருந்து வந்தது என சைபர் செல் மூலம் விரிவான விசாரணையில் இறங்கி இருக்கின்றனர்.
இதுகுறித்து ஜீசன் சித்திக், “கடந்த 3 நாட்களாக தொடர்ந்து இமெயிலில் எனக்கு கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ’ரூ.10 கோடி தராவிட்டால் தந்தையின் முடிவு உனக்குத்தான்’ என்று இமெயிலில் கூறப்பட்டுள்ளது. அதை அனுப்பியவர் தாவூத் இப்ராஹிம் கும்பலில் இருந்து தொடர்புகொண்டு இருப்பதாகவும், போலீசிடம் கூறக்கூடாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆறு மாதங்களாக, ஜீஷான் சித்திக்கிற்கு பல கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. இந்த மிரட்டல்கள் மிரட்டி பணம் பறிக்கும் முயற்சிகளுடன் தொடர்புடையவை என்றும், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடையவை என்றும் நம்பப்படுகிறது , இந்த கும்பல் அவரது தந்தையின் கொலையில் தொடர்புடையது என்றும் நம்பப்படுகிறது.
பாபா சித்திக் படுகொலைக்குப் பிறகு, அவருடைய மகன ஜீஷனின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அவருக்கு, 'Y' பிரிவு பாதுகாப்பின்கீழ் வைக்கப்பட்டார்.