அந்நாட்டில் உள்ள 18 முதல் 25 வயதுக்குட்பட்ட அனைத்து ஆண்களும், 18 வயதை அடைந்த 30 நாட்களுக்குள் இராணுவத் தேர்வு சேவையில் (Selective Service) பதிவு செய்வது சட்டப்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு மீண்டும் அதிபராகப் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இதனால், அவருக்கு உள்நாட்டிலேயே எதிர்ப்புகள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில்கூட, இஸ்ரேலின் தூண்டுதலின்பேரில் ஈரான் மீது போர் தொடுத்தார். தற்போது அது இரண்டு வார காலத்திற்கு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமெரிக்கா கட்டாய ராணுவச் சேவையை அமல்படுத்த உள்ளது.
அந்நாட்டில் உள்ள 18 முதல் 25 வயதுக்குட்பட்ட அனைத்து ஆண்களும், 18 வயதை அடைந்த 30 நாட்களுக்குள் இராணுவத் தேர்வு சேவையில் (Selective Service) பதிவு செய்வது சட்டப்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யத் தவறினால், அபராதம், சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசாங்க சலுகைகள் மற்றும் வேலைவாய்ப்புகளை இழக்க நேரிடும் எனவும் அது தெரிவித்திருப்பதாக, நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
ஏற்கெனவே பல அமெரிக்க மாகாணங்கள் ராணுவப் பணிக்கான பதிவை ஓட்டுநர் உரிம விண்ணப்பங்களுடன் இணைத்துள்ள நிலையில், இந்தப் புதிய முறையானது நாடு முழுவதும் பதிவைத் தானியங்குபடுத்தும் எனத் தெரிகிறது. அதாவது, கூட்டாட்சி அமைப்பான செலக்டிவ் சர்வீஸ் சிஸ்டம் (SSS), பல தசாப்தங்கள் பழமையான சுய-பதிவு செயல்முறைக்கு பதிலாக, தகுதியுள்ள அனைத்து ஆண்களையும் டிசம்பர் 2026-க்குள் இராணுவப் பணி நியமனப் பட்டியலில் தானாகவே சேர்க்கும் ஒரு புதிய, நெறிப்படுத்தப்பட்ட அமைப்பை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
முன்னதாக, தகுதியுள்ள ஆண்களை நேரடியாகப் படைச்சேர்ப்புத் தரவுத்தளத்தில் சேர்ப்பதற்காகக் கூட்டாட்சித் தரவுகளை ஒருங்கிணைக்கக் கட்டாயப்படுத்தும் 2026ஆம் ஆண்டின் தேசியப் பாதுகாப்பு அங்கீகாரச் சட்டத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்திருந்தது. அதன்பேரிலேயே அமெரிக்காவில் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. வியட்நாம் போருக்குப் பிறகு அமெரிக்கா கட்டாய இராணுவச் சேவையை நடத்தாத நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஈரான் மோதலுக்குப் பிறகு இத்தகைய அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருப்பது பேசுபொருளாகி உள்ளது.