செய்தியாளர் - M. மீரா
அமெரிக்கா - ஈரான் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதலை நடத்தவுள்ளதாகத் தெரிவித்திருந்தார். ஜூலை 8 அன்று அதிபர் டிரம்ப் போர்நிறுத்தம் முடிவுக்கு வந்ததாக அறிவித்ததிலிருந்து ஈரான் மீதான தாக்குதல்களின் வேகம் அதிகரித்துள்ளது.
அல் ஜசீரா செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, ஈரானின் கெஷ்ம் தீவு, பண்டார் அப்பாஸ், சிரிக், சபஹார், கோனராக், ராஸ்க் நகரம், கொண்டாப் மற்றும் மேற்கு நகரமான கோரமாபாத் உள்ளிட்ட பல இடங்களில் தாக்குதல்கள் நடந்துள்ளது.
அஹ்வாஸ் நகரில் இருக்கும் ஷாஹித் பாகாயி மருத்துவமனை அமெரிக்கத் தாக்குதலால் பாதிக்கப்பட்டு, குழந்தைகள் புற்றுநோய் சிகிச்சை பிரிவு சேதமடைந்ததாக ஈரானின் மெஹர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, குழந்தைகள் உட்பட புற்றுநோயாளிகளுக்கு கீமோதெரபி சிகிச்சை அளித்து வந்த அந்த மருத்துவமனையிலிருந்து நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர் என்றும் அச்செய்தி அறிக்கை கூறுகிறது.
அமெரிக்கத் தாக்குதல்கள் ஈரானிய ராணுவ முகாம் ஒன்றையும் தாக்கின; இதில் குறைந்தது 7 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், நாடு முழுவதும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக, அமெரிக்கத் தாக்குதல்களில் இதுவரை குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளதாக ஈரான் கூறியுள்ளது.
ஈரானின் ஒரே சிவில் அணுமின் நிலையம் அமைந்துள்ள புஷெர் நகரையும் புதிய அமெரிக்கத் தாக்குதல்கள் தாக்கியதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளது .
இதனைத் தொடர்ந்து பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படையைக் குறிவைத்ததாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) கூறியுள்ளது. ஈரானிலிருந்து வந்த மூன்று ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தியதாக ஜோர்டானின் ஆயுதப் படைகள் தெரிவித்தன.
தஸ்னிம் செய்தி நிறுவனத்தின்படி, தென்மேற்கு நகரமான அண்டிமேஷ்க் மீது பறந்த "அமெரிக்காவின் MQ-9 ஆளில்லா விமானத்தை இடைமறித்து அழித்ததாகவும் IRGC கூறியுள்ளது. தங்கள் விண்வெளிப் படையால் இயக்கப்படும் ஒரு புதிய வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக IRGC கூறியுள்ளது.
சவுதி அரேபியா, குவைத்திற்கு கூடுதல் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா
மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், அடிக்கடி ஈரானின் தாக்குதலுக்கு உள்ளாகும் சவுதி அரேபியாவிற்கு 1.96 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத விற்பனைக்கும், குவைத்திற்கு 484 மில்லியன் டாலர் மதிப்பிலான விமானப் பராமரிப்புத் தொகுப்பிற்கும் (aircraft sustainment package) ஒப்புதல் அளிப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.