இஸ்ரேலுக்காக உளவு பார்த்தாரா? வீட்டுக் காவலில் ஈரான் முன்னாள் அதிபர்?
ஈரான் போருக்கு முன்பும் பின்னரும் நடந்த அரசியல்-ராணுவ சூழ்நிலைகளில், அஹ்மதி நெஜாத்தை மையமாகக் கொண்டு அமெரிக்கா, இஸ்ரேல் வகுத்த ரகசிய திட்டங்கள், ஹங்கேரி, குவாத்தமாலா மாநாடுகளில் மொசாட் அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தைகள், அவரது வளாகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல், மொசாட் கொண்டு சென்ற பாதுகாப்பு நடவடிக்கை, செய்தித் தொடர்பாளர் ஜவான்ஃபெக்ருக்கு அனுப்பப்பட்ட ரகசிய பணப் பரிமாற்றங்கள், நான்கு மூத்த ஈரானிய அதிகாரிகள் உறுதிப்படுத்திய குற்றச்சாட்டுகள் ஆகியவை செய்தியில் இடம் பெற்றுள்ளன.
செய்தியாளர் : M. மீரா
பிப்ரவரி 28ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா- இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தியபோது போரின் முதல் நாளிலேயே ஈரானின் உச்சத்தலைவர் அலி காமேனியும் அவரது குடும்பத்தார் சிலரும் கொல்லப்பட்டனர். மோதலின் தொடக்கத்தில், ஈரான் அரசாங்கத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழுமாறு ஈரானியர்களுக்கு ட்ரம்ப் வெளிப்படையாக அழைப்பு விடுத்திருந்தார். ஈரானின் மதகுரு ஆட்சி முறையை மாற்றுவதும் போரின் ஒரு குறிக்கோளாக இருந்தது. இதற்காக ஈரானின் முன்னாள் அதிபர் மஹ்மூத் அகமதி நிஜாத்தை ஈரானின் தலைவராக அமர்த்த அமெரிக்காவும் இஸ்ரேலும் திட்டமிட்டிருந்ததாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது.
அகமதி நிஜாத்தை ஈரானின் தலைவராக அமர்த்தும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ஈரான் போருக்கு முன்னதாகவே ஹங்கேரி மற்றும் குவாத்தமாலா போன்ற நாடுகளில் நடைபெற்ற சர்வதேச மாநாடுகளில் அஹமதி நிஜாத்துக்கு அழைப்பு கொடுத்து கலந்துகொள்ள செய்துள்ளனர், அங்கு இஸ்ரேல் உளவுத்துறை (mossad) அதிகாரிகளைச் சந்தித்து ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது .
இதனை தொடர்ந்து போரின் முதல் நாளில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் அஹ்மதி நெஜாத் தங்கியிருந்த வளாகத்தையும் தாக்கியுள்ளது. மேலும் அவரது கவச வாகனமும் குறிவைக்கப்பட்டுத் தாக்கப்பட்டது. இத்தாக்குதலைத் தொடர்ந்து, அங்கு வந்த ஒரு கார் முன்னாள் அதிபர் அஹ்மதி நெஜாத்தை ஏற்றிக்கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு சென்றிருக்கிறது .
அந்தக் காரை இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட்டைச் (Mossad) சேர்ந்தவர்கள் கொண்டு வந்ததாகவும், அவர்கள் அஹ்மதி நெஜாத்தை பாதுகாப்பான மற்றும் ரகசியமான இடத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் தற்போது வெளியாகியிருக்கும் தி நியுயார்க் டைம்ஸ் செய்தி அறிக்கை கூறுகிறது. மேலும், இஸ்ரேலின் இந்தத் திட்டத்தில் அகமதி நிஜாத்திற்கு அதிருப்தி ஏற்பட்டதால், அவர் அந்தப் பாதுகாப்பான இடத்தைவிட்டு வெளியேறினார் என்றும் கூறப்படுகிறது.
பிப்ரவரி மாதம் நடந்த இந்த நிகழ்வுக்குப் பிறகு அவர் பொதுவெளியில் எங்கும் தோன்றவில்லை. கடந்த வாரம், ஈரானின் மறைந்த உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனியின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் அவர் சிறிது நேரம் மட்டுமே கலந்துகொண்டுள்ளார்.
இந்நிலையில் அவர் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ரகசியத் திட்டத்தின் கீழ் தொடர்பில் இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, ஈரானின் புரட்சிகரப் படையினரால் (IRGC) வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இத்தகவலை நான்கு மூத்த ஈரானிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஈரான் மீதான போர் துவங்குவதற்கு முன்னர் இஸ்ரேல் அஹ்மதி நெஜாத்தின் செய்தித் தொடர்பாளர் அலி அக்பர் ஜவான்ஃபெக்ருக்கு பல ரகசியப் பணப் பரிமாற்றங்களைச் செய்ததாகவும், இஸ்ரேலிய உளவாளிகள் அவரைப் பலமுறை சந்தித்ததாகவும் அந்த செய்தி அறிக்கை கூறுகிறது.
மொசாட் அதிகாரிகளும் ஜவான்ஃபெக்ரும் 'தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகைக்கு இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாகவும் இச்செய்தி அறிக்கை கூறுகிறது.

