Model image x page
உலகம்

இந்தியாவுக்குக் குறி.. பாகிஸ்தானில் தஞ்சமடைந்த பயங்கரவாதக் குழுக்கள்.. அமெரிக்கா அறிக்கை!

இந்தியாவைக் குறிவைக்கும் நோக்கில், பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பல பயங்கரவாதக் குழுக்கள் அந்நாட்டில் தஞ்சமடைந்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Prakash J

பாகிஸ்தான் பல்வேறு ஆயுதமேந்திய அரசு சாரா அமைப்புகளுக்கு ஒரு மையமாகவும் இலக்காகவும் இருந்து வருகிறது; இவற்றில் பல 1980-களிலிருந்து செயல்பட்டு வருகின்றன. இவை, இந்தியாவுக்கு கவலைகளை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.

அண்டை நாடான பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் நீண்டகாலமாகவே எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. இதனால், இருதரப்பிலேயும் ராஜதந்திர உறவுகள் சீர்குலைந்துள்ளன. அதேநேரத்தில், பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் அவ்வப்போது இந்தியா மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். எனினும், இதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவைக் குறிவைக்கும் நோக்கில், பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பல பயங்கரவாதக் குழுக்கள் அந்நாட்டில் தஞ்சமடைந்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க காங்கிரஸின் ஆராய்ச்சி சேவை வெளியிட்டுள்ள அறிக்கையில், ’லஷ்கர்-இ-தைபா, ஜெய்ஷ்-இ-முகமது, ஹரக்கத்-உல்-ஜிஹாத் இஸ்லாமி, ஹரக்கத்-உல்-முஜாஹிதீன் மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் உள்ளிட்ட பயங்கரவாதக் குழுக்கள் பாகிஸ்தானில் மண்ணில் இருந்து தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. மேலும், பாகிஸ்தான் பல்வேறு ஆயுதமேந்திய அரசு சாரா அமைப்புகளுக்கு ஒரு மையமாகவும் இலக்காகவும் இருந்து வருகிறது; இவற்றில் பல 1980-களிலிருந்து செயல்பட்டு வருகின்றன. தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகள் மற்றும் கொள்கை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபையால் பயங்கரவாத அமைப்புகளாக வகைப்படுத்தப்பட்ட வலையமைப்புகள் முழுமையாகக் கலைக்கப்படவில்லை. இவை, இந்தியாவின் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

model image

தெற்காசிய நிபுணர் கே.ஆலன் க்ரோன்ஸ்டாட் என்பவரால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை, உலகளாவிய நோக்குடையவை, ஆப்கானிஸ்தானை மையமாகக் கொண்டவை, இந்தியா மற்றும் காஷ்மீரை மையமாகக் கொண்டவை, உள்நாட்டை மையமாகக் கொண்டவை, மற்றும் மதவாத, குறிப்பாக ஷியா எதிர்ப்பு அமைப்புகள் என ஐந்து வகை குழுக்களைக் குறிக்கிறது. மேலும் பட்டியலிடப்பட்டுள்ள 15 குழுக்களில் 12, அமெரிக்கச் சட்டத்தின்கீழ் வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இஸ்லாமியத் தீவிரவாத சித்தாந்தங்களால் இயக்கப்படுகின்றன என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.