டொனால்ட் ட்ரம்ப் pt web
உலகம்

அதிபராக 2வது முறையாக பதவியேற்கும் ட்ரம்ப்.. சர்ச்சைப் பேச்சுகளும் அதன் பின்னணியும்

உலகின் சக்திவாய்ந்த பதவியாக கருதப்படும் அமெரிக்க அதிபர் பதவியை இரண்டாவது முறையாக அலங்கரிக்கும் ட்ரம்பின் பின்னணி குறித்து பார்க்கலாம்.

PT WEB

டொனால்டு ட்ரம்ப்பின் அதிரடி அரசியல் பாணி உலகம் கண்டிராதது. அமெரிக்காவில் சட்ட விரோத குடியேற்றங்களை தடுக்க எல்லை முழுவதும் பெருஞ்சுவர் எழுப்ப வேண்டும் எனக்கூறியவர். கொரோனா உலகெங்கும் உயிர்களை உறிஞ்சிக்கொண்டிருந்த போது சானிடைசர்களை ஊசி மூலம் உடலுக்குள் நேரடியாக செலுத்திக்கொள்ளலாமே எனக்கூறி அதிர வைத்தவர்.

தொழிலதிபர், தொலைக்காட்சி பிரபலம் ஆகிய அடையாளங்களை கொண்டிருந்த ட்ரம்ப் 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் குதித்து ஆட்சி பீடத்திலும் கோலோச்சியவர். அரசியல் பின்புலமோ அல்லது ராணுவ பின்புலமோ இன்றி அமெரிக்க அரியணை ஏறிய முதல் நபர் ட்ரம்ப்தான்.

டொனால்ட் ட்ரம்ப்

பருவநிலை மாற்றம் தொடர்பான பாரீஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை வெளியேற செய்தார். ஈரானுடனான சர்வதேச அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்தும் வெளியேறினார். ஒரு பொத்தானை அழுத்தினால் அமெரிக்காவே அழிந்துவிடும் என எச்சரித்த வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னை நேரில் சந்தித்து, நட்பு பாராட்டி வரலாற்றை மாற்றி அமைத்தார். சீனாவுடன் வர்த்தக போரை தொடங்கி, உலக பொருளாதாரத்தையே ஆட்டுவித்தார். ஒரு புறம் பிரதமர் மோடியுடன் நட்பு பாராட்டிவிட்டு மறுபுறம் ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைக்காக இந்தியாவை குறை கூறினார். தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாது என கடந்த முறை இவர் கூறியதும் நாடாளுமன்றத்தில் இவர் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதையும் கண்டு அமெரிக்கா மட்டுமல்ல அகிலமே அதிர்ந்துதான் போனது.

அரசியல் வாழ்க்கை முடிந்தது என கருதிய நிலையில் சிலிர்த்தெழுத்து மீண்டும் தேர்தல் களம் கண்டார் ட்ரம்ப். பரப்புரைகளில் ட்ரம்ப் 2 முறை கொலை முயற்சிகளை எதிர்கொண்டார். ஒரு முறை துப்பாக்கிக் குண்டு காதை கிழித்துக்கொண்டு சென்ற போதும் ரத்தம் கொட்டிய போதும் சற்றும் அஞ்சாமல் FIGHT FIGHT FIGHT என ஆவேசமாக முஷ்டியை மடக்கி குரல் எழுப்பியது அவரது மன உறுதியின் ஆழத்தை காட்டியது.

ட்ரம்ப் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற அழுத்தம் திருத்தமான கொள்கையே அந்நாட்டு அரசியலில் அவருக்கு வலுவான அடித்தளம் இட்டுத்தந்துள்ளது. இதன் பலனாக அதிபர் தேர்தலில் அமோக வெற்றிபெற்றார் ட்ரம்ப். வென்றவுடன் இவர் பேசிய பேச்சுகள் சரவெடி ரகம். கனடா, கிரீன்லாந்து, பனாமா கால்வாய் இணைப்பு தொடங்கி வெளிநாட்டு பொருட்களுக்கு அதிக வரி விதிப்பது வரை உலகையே அதிர வைத்தது ட்ரம்ப்பின் பேச்சுகள்... சமூக தள பதிவுகள்.

ட்ரம்ப் ஆட்சியில் அமர்கிறார் என்றதும் ஒன்றே கால் ஆண்டாக நீடித்து வந்த இஸ்ரேல் - காசா போர் கூட நின்றுவிட்டது. ட்ரம்ப் ஆட்சியில் ஆயுதப்போர்கள் அஸ்தமித்து வணிகப்போர்கள் வலுக்கும் என்பதற்கான அறிகுறிகள் இப்போதே தெரியத் தொடங்கிவிட்டது. அடுத்த 4 ஆண்டுகளுக்கு உலக அரசியல் விறுவிறுப்பாகத்தான் இருக்கப்போகிறது.