ட்ரம்ப், மோடி எக்ஸ் தளம்
உலகம்

எண்ணெய் இறக்குமதி மூலம் ரஷ்யாவிற்கு உதவும் இந்தியா.. ஐ.நாவில் மீண்டும் குற்றஞ்சாட்டிய ட்ரம்ப்!

இந்தியாவும், சீனாவும் எண்ணெய் இறக்குமதி மூலம் ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளுக்கு நிதி வழங்குவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

Prakash J

இந்தியாவும், சீனாவும் எண்ணெய் இறக்குமதி மூலம் ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளுக்கு நிதி வழங்குவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு அதிரடி காட்டி வருகிறார். அந்த வகையில், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளாத நாடுகளுக்குப் புதிய வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிற்கும் 50% வரி விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 25% வரியுடன், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி கூடுதலாக 25% வரி விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை இந்திய நிறுவனங்கள் நிறுத்தவில்லை. இதனால் அமெரிக்க - இந்திய உறவுகள் விரிசலைச் சந்தித்து வருகின்றன.

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் பொது அவைக் கூட்டத்தில் நேற்று உரையாற்றிய ட்ரம்ப், ”சர்வதேச சமூகம் ரஷ்யாவிற்கு உதவக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அப்போது பேசிய அவர், “நான் ஏழு மாதங்களில் ஏழு போர்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளேன். அதில் கம்போடியா - தாய்லாந்து, இந்தியா - பாகிஸ்தான், இஸ்ரேல் - ஈரான் ஆகிய போர்கள் அடங்கும். இதை முன்பு எந்த அதிபரோ, பிரதமரோ, நாடோ செய்ததில்லை. இதைச் செய்ததில் நான் பெருமை கொள்கிறேன். இதற்காக எனக்கு நோபல் பரிசு கிடைக்க வேண்டும் என்று அனைவரும் கூறுகிறார்கள்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “நான் காஸா போர் நிறுத்தத்திலும் ஈடுபட்டு வருகிறேன். ஆனால், ஹமாஸ்தான் அமைதிக்கான பேச்சுவார்த்தைகளை மறுத்து வருகிறது. சிலர், பாலஸ்தீனத்தை ஒருமனதாக ஒரு நாடாக அங்கீகரித்து வருகிறார்கள். ஆனால், அது ஹமாஸ் தீவிரவாதத்தின் அட்டூழியங்களுக்கு பெரிதும் உதவும். உக்ரைன் போரை நிறுத்தவும் தொடர்ந்து பணிபுரிந்து வருகிறேன். ரஷ்ய அதிபர் புதினுடன் எனக்கு இருக்கும் நட்பால் அது எளிதாக முடிந்துவிடும் என்று நான் நினைத்தேன். ஆனால், அது நடக்கவில்லை. ரஷ்யாவிடம் இந்தியாவும், சீனாவும் எண்ணெயை வாங்குவதன் மூலம் உக்ரைன் போருக்கு முதன்மை நிதியளிப்பவர்களாக இருக்கிறார்கள். நேட்டோ நாடுகள்கூட ரஷ்ய எரிசக்தி, எரிபொருள்களை ரஷ்யாவில் இருந்து வாங்கி வருகிறார்கள். அவர்கள், அவர்களுக்கு எதிரான போருக்கே நிதியளித்து வருகிறார்கள். இந்தப் போரை நிறுத்த ஐ.நாவில் கூடியிருக்கும் அனைத்து ஐரோப்பிய நாடுகளும் இந்த நாடுகள் மீது வரி விதிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

முன்னதாக, ஐக்கிய நாடுகள் பொது அவை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்தார். ஆனால், அவருக்குப் பதிலாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டது.