Earth from space Reuters
உலகம்

சூரிய ஒளி விற்பனைக்கு.. 50,000 செயற்கைக்கோள்கள்.. இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்த அமெரிக்கா!

சூரிய ஒளி விற்பனை: 2027 முதல் Earendil-1 செயற்கைக்கோள் சோதனை

PT WEB

செய்தியாளர் - M.மீரா

இரவு நேரத்திலும் சூரிய ஒளியைப் பெற முடியுமா? அதுவும் நமக்குத் தேவையான இடத்தில், நாம் விரும்பும் நேரத்தில் சூரிய ஒளியைப் பெற முடிந்தால் எப்படி இருக்கும்?

அறிவியல் புனைகதைகளில் வருவது போன்று இந்தத் திட்டத்தை நிஜமாக்க அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி நிறுவனம் ஒன்று முயற்சி செய்து வருகிறது. கலிபோர்னியாவைச் சேர்ந்த Reflect Orbital என்ற நிறுவனம், விண்வெளியில் பிரம்மாண்ட கண்ணாடிகளைச் செயற்கைக்கோள்கள் மூலம் நிலைநிறுத்தி, இரவு நேரத்தில் பூமியின் குறிப்பிட்ட பகுதிகளுக்குச் சூரிய ஒளியைப் பிரதிபலிக்கச் செய்யத் திட்டமிட்டுள்ளது.

Skyroot Aerospace

இதற்காக இந்தியாவின் Skyroot Aerospace நிறுவனத்துடன் இரண்டு ராக்கெட் ஏவுதல்களுக்கான ஒப்பந்தத்தை செய்துள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தைச் சோதிப்பதற்கான முதல் விண்வெளிப் பயணம் 2027-ம் ஆண்டு இரண்டாவது காலாண்டில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டம் எப்படி செயல்படும்?

18 மீட்டர் நீளம், 18 மீட்டர் அகலம் கொண்ட பிரம்மாண்ட கண்ணாடிகள் குறைந்த உயர பூமி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும். இந்தக் கண்ணாடிகள் சூரிய ஒளியைப் பிரதிபலித்து, இரவு நேரத்திலும் பூமியின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு ஒளியை அனுப்பும்.

இதன் மூலம் சூரிய மின்சார உற்பத்தி நிலையங்கள் கூடுதல் நேரம் மின்சாரம் தயாரிக்க முடியும். பேரிடர் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளுக்கும் இந்த ஒளியைப் பயன்படுத்தலாம்.

Sunlight in night

2035-ம் ஆண்டுக்குள் இதுபோன்ற 50,000 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இந்த நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. இதற்கான Earendil-1 என்ற சோதனைச் செயற்கைக்கோள் மூலம் வாடிக்கையாளர்கள் செயலி வாயிலாகத் தங்களுக்குத் தேவையான இடத்தைத் தேர்வு செய்ய முடியும்.

இந்தத் திட்டத்துக்கு வானியல் ஆய்வாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.வளிமண்டலத்தில் உள்ள மூலக்கூறுகள் மற்றும் தூசித் துகள்கள் காரணமாகப் பிரதிபலிக்கப்படும் ஒளி, திட்டமிட்ட இடத்தைத் தாண்டி சுற்றியுள்ள பகுதிகளுக்கும் பரவக்கூடும் என 2025-ல் வெளியான ஆய்வு எச்சரித்துள்ளது. இதனால், அனுமதி பெறாத பகுதிகளிலும் முழு நிலவு வெளிச்சத்தைவிட அதிகமான ஒளி பரவ வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Sun

இதனால் இரவு நேர இயற்கைச் சூழலும், வானியல் ஆய்வுகளும் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்தத் திட்டத்துக்கு அமெரிக்காவில் ஒழுங்குமுறை அனுமதி கிடைத்துள்ளதால், அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் சில அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.