ஈரான் போருக்கு மத்தியில் அமெரிக்க கடற்படை ஈரானுக்கு எதிராக ஹார்முஸ் ஜலசந்தியில் கடுமையான முற்றுகை நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் சூழலில், கடற்படைச் செயலாளர் ஃபெலன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காரணமே சொல்லப்படாமல் அவர் நீக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் போருக்கு மத்தியில் நடந்த பெரும் மாற்றங்களில், அமெரிக்காவில் ராணுவத் தளபதி பதவி நீக்கம் செய்யப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு அமெரிக்க கடற்படைச் செயலாளரும் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என்று அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. எனினும், அதற்கான காரணத்தையோ அல்லது எதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பது குறித்தோ அந்த அறிக்கை எதுவும் கூறவில்லை .
இந்த மாதத் தொடக்கத்தில், ஹெக்ஸெத் இராணுவத் தலைமைத் தளபதி ராண்டி ஜார்ஜையும் எந்த விளக்கமும் அளிக்காமல் பணிநீக்கம் செய்தார். பின்னர், இராணுவச் செயலர் டேனியல் டிரிஸ்கோல் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே இந்த முடிவுக்குக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தப் போருக்கு மத்தியில், மற்ற அமெரிக்கத் தளபதிகளான டேவிட் ஹோட்னே மற்றும் வில்லியம் கிரீன் ஜூனியர் ஆகியோரையும் பென்டகன் பணிநீக்கம் செய்துள்ளது.
அமெரிக்க கடற்படையின் போர் கப்பல் கட்டுமானத்தை விரிவுபடுத்தும் செயல்களில் அவர் மிகவும் மெதுவாகச் செயல்படுவதாக கூறப்பட்டதால் ஃபெலன் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்று கூறப்படுகிறது .
பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத், துணைப் பாதுகாப்புச் செயலாளர் ஸ்டீவ் ஃபைன்பெர்க் மற்றும் கடற்படையின் இரண்டாம் நிலை சிவில் அதிகாரியான ஹங் காவோ உள்ளிட்ட பென்டகனின் முக்கியத் தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளும் காரணமாக கூறப்படுகிறது. ஹங் காவோ தற்போது தற்காலிக கடற்படைச் செயலாளராகப் பணியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.