அமெரிக்கா விண்வெளியில் இருந்து செயல்படும் ஆயுதத் திறன்களை பெற்றுள்ளதாக விமானப்படை செயலாளர் ட்ராய் மெய்ன்க் அறிவித்தது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனா, ரஷ்யா ஆகியவை எதிர்-விண்வெளி தொழில்நுட்பங்களை வேகமாக மேம்படுத்தும் நிலையில், விண்வெளி எதிர்கால போர்களுக்கான புதிய ராணுவக் களமாக மாறும் அபாயம் குறித்து சர்வதேச சமூகத்தில் கவலை அதிகரித்துள்ளது.
செய்தியாளர் - M.மீரா
விண்வெளியை மையமாகக் கொண்டு அமெரிக்கா, சீனா, ரஷ்யா இடையே போட்டி தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், விண்வெளியில் ஆயுதங்களை நிலைநிறுத்தியுள்ளதாக அமெரிக்காவின் விமானப்படை செயலாளர் ட்ராய் மெய்ன்க் (Air Force Secretary Troy Meink) தெரிவித்துள்ளார். இந்தச் செய்தி சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேரிலாந்தில் நடைபெற்ற Air, Space and Cyber Conference மாநாட்டில் பேசிய ட்ராய் மெய்ன்க், அமெரிக்கா தற்போது விண்வெளியில் இருந்து செயல்படும் ஆயுதத் திறன்களை பெற்றுள்ளதாக தெரிவித்தார். எதிரிகளின் தாக்குதல்களில் இருந்து அமெரிக்காவின் கூட்டு ராணுவப் படைகளை பாதுகாப்பதற்காக இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
ஆனால், இந்த ஆயுதங்கள் என்ன வகையைச் சேர்ந்தவை, எப்போது விண்வெளிக்கு அனுப்பப்பட்டன, அவற்றின் எண்ணிக்கை எவ்வளவு போன்ற எந்த விவரங்களையும் மெய்ன்க் வெளியிடவில்லை. செய்தியாளர்கள் கூடுதல் தகவல்களை கேட்டபோதும், அவர் அதுகுறித்து விளக்க மறுத்துவிட்டார்.
அமெரிக்காவின் மீது அச்சுறுத்தல் ஏற்படும் போது அதை எதிர்கொள்ளும் திறனை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்று கூறிய மெய்ன்க், அமெரிக்காவின் ஆதிக்கம் வான்வெளியில் மட்டுமின்றி விண்வெளியிலும் தொடர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், விண்வெளி எதிர்கால போர்களுக்கான புதிய களமாக மாறுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சீனா, ரஷ்யாவால் அதிகரிக்கும் போட்டி
சீனாவும் ரஷ்யாவும் விண்வெளி மற்றும் எதிர்-விண்வெளி (Counterspace) தொழில்நுட்பங்களை வேகமாக மேம்படுத்தி வருவதாக ஏற்கனவே அமெரிக்காவின் விண்வெளிப் படையான US Space Force எச்சரித்துள்ளது.
சீனா தனது ராணுவ நவீனமயமாக்கலின் ஒரு பகுதியாக விண்வெளி மற்றும் எதிர்-விண்வெளி திறன்களை உருவாக்கி வருவதாக அமெரிக்கா கூறுகிறது. அதேபோல், ரஷ்யா விண்வெளியை எதிர்கால போருக்கான முக்கிய களமாக கருதுவதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ரஷ்ய செயற்கைக்கோள்கள் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாகச் செயல்படும் பயிற்சிகளில் ஈடுபட்டிருப்பது, எதிர்காலத்தில் செயற்கைக்கோள்களை தாக்குவது மற்றும் பாதுகாப்பது போன்ற நடவடிக்கைகளுக்கான பயிற்சியாக இருக்கலாம் என அமெரிக்கா சந்தேகம் தெரிவித்துள்ளது.
சீனா, அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடியதாக கூறப்படும் partial-orbit hypersonic missile தொழில்நுட்பத்தையும் உருவாக்கி வருவதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும், ரஷ்யா விண்வெளியில் அணு ஆயுதத்தை நிலைநிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் அமெரிக்க உளவுத்துறை மதிப்பிட்டுள்ளது. இந்த ஆயுதம் மிகப்பெரிய மின்காந்த அலைகளை உருவாக்கி செயற்கைக்கோள்களை செயலிழக்கச் செய்யக்கூடும் . ஆனால், இந்தக் கூற்றை ரஷ்யா மறுத்துள்ளது.
செயற்கைக்கோள்கள் பாதிக்கப்பட்டால் என்ன ஆகும்?
விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள்கள் வெறும் தகவல் தொடர்புக்காக மட்டுமல்லாமல், வானிலை கணிப்பு, பேரிடர் மீட்பு, வழிகாட்டுதல், கப்பல் போக்குவரத்து, வங்கி சேவைகள் உள்ளிட்ட பல துறைகளுக்கு தேவைப்படுகிறது.
எனவே, செயற்கைக்கோள்களை குறிவைக்கும் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டால் அதன் தாக்கம் ராணுவத்தைத் தாண்டி பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையிலும் பாதிப்பு ஏற்படக்கூடும்.
இதற்கிடையே, 1967-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட Outer Space Treaty, விண்வெளியில் அணு ஆயுதங்கள் மற்றும் பேரழிவு ஆயுதங்களை நிலைநிறுத்துவதை தடை செய்கிறது. ஆனால், வழக்கமான ஆயுதங்களை விண்வெளியில் பயன்படுத்துவது அல்லது பூமியில் இருந்து விண்வெளியில் உள்ள பொருட்களை தாக்குவது குறித்து முழுமையான தடை விதிக்கப்படவில்லை.
ட்ரம்ப்பின் ‘Golden Dome’ திட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், விண்வெளி பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். அமெரிக்காவின் அடுத்த தலைமுறை ஏவுகணைத் தடுப்பு அமைப்பான “Golden Dome” திட்டமும் இதன் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.
இஸ்ரேலின் Iron Dome அமைப்பை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட உள்ள இந்த பல பில்லியன் டாலர் திட்டம், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளை இடைமறிக்கும் திறனை அமெரிக்காவுக்கு வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்படுகிறது.
இந்த திட்டம் 2028-ஆம் ஆண்டுக்குள் நிறைவு பெற வேண்டும் என ட்ரம்ப் இலக்கு நிர்ணயித்துள்ளார். மேலும், விண்வெளியில் இருந்து செயல்படும் அமெரிக்காவின் ஏவுகணை இடைமறிப்பு திட்டமும் ஒரு ஆண்டுக்குள் விமானப் பரிசோதனைக்கு தயாராகும் நிலையில் உள்ளதாக மெய்ன்க் தெரிவித்துள்ளார்.
இதனால், விண்வெளி இனி வெறும் அறிவியல் ஆராய்ச்சிக்கான இடமாக மட்டும் இல்லாமல், அமெரிக்கா–சீனா–ரஷ்யா இடையேயான அடுத்த தலைமுறை ராணுவப் போட்டியின் முக்கிய களமாக மாறுகிறதா? என்ற கேள்வி சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.