\
Alice Weidel
Alice WeidelReuters

'நாட்டில் இருந்து வெளியே போங்க..' ஜெர்மனியில் வெடித்த புதிய சர்ச்சை.. அதிர்ச்சியில் 10 லட்சம் பேர்!

ஜெர்மனியின் வலதுசாரி கட்சியான AfD-இன் இணைத் தலைவர் Alice Weidel, ’ஜெர்மனியில் வசிக்கும் உக்ரைனியர்கள், குறிப்பாக ராணுவ வயதில் உள்ள இளம் ஆண்கள், தங்கள் நாட்டுக்குத் திரும்ப வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.
Published on

செய்தியாளர்: எம்.மீரா

2022-ஆம் ஆண்டு தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் இடையே போர், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில் 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஒரு மில்லியனுக்கும் அதிகமான உக்ரைனியர்களுக்கு ஜெர்மனி தற்காலிக பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள் மற்றும் உக்ரைனுக்கான ஜெர்மனியின் ஆதரவு குறித்து அந்நாட்டில் அரசியல் விவாதம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

ukraine Refugees
ukraine Refugees Reuters

ஜெர்மனியின் வலதுசாரி கட்சியான AfD-இன் இணைத் தலைவர் Alice Weidel, ’ஜெர்மனியில் வசிக்கும் உக்ரைனியர்கள், குறிப்பாக ராணுவ வயதில் உள்ள இளம் ஆண்கள், தங்கள் நாட்டுக்குத் திரும்ப வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார். ஆஸ்திரிய ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ஜெர்மனியில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உக்ரைனியர்கள் நலத்திட்ட உதவிகளைப் பெற்று வருவதாகவும், இந்தச் செலவு இனி நீடிக்க முடியாத அளவுக்கு அதிகமாகிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், உக்ரைனியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காரணம் முடிவுக்கு வந்தவுடன் அவர்கள் தாய்நாட்டுக்குத் திரும்ப வேண்டும் என்றும் Weidel தெரிவித்துள்ளார். குறிப்பாக, ராணுவச் சேவைக்கு உட்பட்ட வயதில் இருக்கும் இளம் ஆண்களைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்பதே அவரது வாதமாக உள்ளது.

இதுமட்டுமின்றி, AfD ஆட்சிக்கு வந்தால் உக்ரைனுக்கு வழங்கப்படும் ஜெர்மனியின் நிதி மற்றும் ராணுவ உதவிகளை நிறுத்துவதாகவும் Weidel கூறியுள்ளார். மேலும், உக்ரைனிடம் இருந்து ஜெர்மனிக்கு இழப்பீடு கோர வேண்டும் என்றும் அவர் முன்பு வலியுறுத்தியிருந்தார்.

AFD
AFDReuters

இதற்கிடையே, ஜெர்மனியிலும் AfD-ன் அரசியல் செல்வாக்கு வேகமாக அதிகரித்து வருகிறது. சமீபத்திய Saxony-Anhalt மாநிலத் தேர்தலில் AfD மிகப்பெரிய வெற்றியை அடைந்ததாகவும், சுமார் 44 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜெர்மனியில் முதல் முறையாக ஒரு தீவிர வலதுசாரி கட்சி மாநில அரசை அமைக்கும் வாய்ப்பு குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெர்மனியின் பல நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் போராட்டங்களில் ஈடுபட்டனர். பெர்லின், ஹாம்பர்க், முனிச் உள்ளிட்ட நகரங்களில் AfD-க்கு எதிராக பேரணிகள் நடைபெற்றன. முனிச்சில் நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் சிலர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

AfD-ஐ தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன. இதனால், உக்ரைன் அகதிகள் விவகாரம், குடியேற்றக் கொள்கை, பொருளாதார நெருக்கடி மற்றும் AfD-ன் எழுச்சி ஆகியவை ஜெர்மனியின் அரசியலில் மிகப்பெரிய பிளவை உருவாக்கியுள்ளன.

Alice Weidel
ஈரான், அமெரிக்காவின் அடுத்த வியட்நாமா? ஆயுதங்கள் காலி.. நெருக்கடியில் ட்ரம்ப்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com