ஜோசப் சுபா, அல்ஃபாயூமி எக்ஸ் தளம்
உலகம்

பாலஸ்தீன அமெரிக்க குழந்தை | இனவெறியில் குழந்தையை கொன்ற முதியவர்.. 53 ஆண்டுகள் சிறை!

இனவெறியில், பாலஸ்தீன அமெரிக்க குழந்தையை 26 முறை குத்திய முதியவருக்கு 53 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Prakash J

இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னை என்பது பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர் 7, 2023இல் இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 252 பேர் பணயக் கைதிகளாகவும் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 15 மாதங்களாக போர் நடைபெற்ற நிலையில், இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு, இரு நாடுகளும் பிணைக்கைதிகளை பரிமாறிக் கொண்டன. தொடர்ந்து 2வது முறையாக போர் நிறுத்தம் ஒப்பந்தம் அமல்படுத்தப் படாததால், மீண்டும் அங்கு போர் நடைபெற்று வருகிறது.

ஜோசப் சுபா, அல்ஃபாயூமி

இதற்கிடையே, அமெரிக்காவில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆறு வயது பாலஸ்தீன- அமெரிக்க சிறுவனை குத்திக் கொன்ற அமெரிக்க முதியவருக்கு 53 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிகாகோவைச் சேர்ந்தவர், ஜோசப் சுபா (73). இவருடைய வீட்டில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வந்தனர். இந்த நிலையில், அக்டோபர், 2023இல் இஸ்ரேல் மீது பாலஸ்தீனம் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து. அதனால் ஆத்திரமடைந்த ஜோசப் சுபா, தன் வீட்டில் வசித்த பாலஸ்தீனத்தைச் சேர்ந்த தாய் ஹனான் ஷாஹீன் மற்றும் அவரது 6 வயது இளம் மகன் வாடி அல்ஃபாயூமியை கத்தியால் குத்தியுள்ளார். இனவெறியால் ஜோசப், அந்தச் சிறுவனை 26 முறை கத்தியால் குத்தினார். இதனை தடுக்க முயன்ற சிறுவனின் தாய்க்கும் கத்திக்குத்து விழுந்தது. இந்த சம்பவத்தில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட ஜோசப் மீது இல்லினாய்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியான நிலையில் அவருக்கு 53 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிறுவனைக் குத்தியதற்காக 30 ஆண்டுகளும், அவரது தாயாரைத் தாக்கியதற்காக மேலும் 20 ஆண்டுகளும், வெறுப்புக் குற்றத்தைச் செய்ததற்காக மூன்று ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.