’ஹமாஸ் வாழ்க’ - பதிவிட்ட நியூயார்க் மருத்துவர்.. பாய்ந்த நடவடிக்கை!
இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னை என்பது பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர், 2023இல் இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 252 பேர் பணயக் கைதிகளாகவும் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 15 மாதங்களாக போர் நடைபெற்ற நிலையில், இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு, இரு நாடுகளும் பிணைக்கைதிகளை பரிமாறிக் கொண்டன. தொடர்ந்து 2வது முறையாக போர் நிறுத்தம் ஒப்பந்தம் அமல்படுத்தப் படாததால், மீண்டும் அங்கு போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ’ஹமாஸ் & ஹிஸ்புல்லா வாழ்க’ என சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட வெளியிட்ட நியூயார்க் நகர மருத்துவர் லீலா அபாஸி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஹமாஸ் என்பது காஸாவைக் கட்டுப்படுத்தும் ஒரு பாலஸ்தீனிய போராளிக் குழுவாகும். அதேநேரத்தில் ஹிஸ்புல்லா என்பது லெபனானை தளமாகக் கொண்ட ஈரான் ஆதரவு பெற்ற போராளிக் குழுவாகும். இரண்டுமே அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிறரால் பயங்கரவாத அமைப்புகளாக முத்திரை குத்தப்பட்டுள்ளன.
இந்தப் போராளிக் குழுக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் நபர்களுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில்தான் நியூயார்க் நகர மருத்துவர் லீலா அபாஸி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மவுண்ட் சினாயின் அப்பர் ஈஸ்ட் சைட் மருத்துவமனையில் மருத்துவத் துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்த லீலா அபாஸி, தொடர்ந்து ஹமாஸ், ஹிஸ்புல்லா ஆகியவற்றுக்கு ஆதரவாகவும் மதரீதியாகவும் கருத்துகளைப் பதிவிட்டு வந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்தே அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அபாஸியின் பதிவுகள் தொடர்பாக மருத்துவ வட்டாரங்கள், "அவர் சமூகத்தில் மிகவும் வெளிப்படையான மற்றும் மிகவும் யூத எதிர்ப்பு மருத்துவர்களில் ஒருவராக அறியப்படுகிறார்" எனக் குற்றஞ்சாட்டியுள்ளன.
முன்னதாக, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டங்களில் பங்கேற்ற இந்திய மாணவி ரஞ்சனி சீனிவாசன் அமெரிக்காவிலிருந்து வெளியேறினார். வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை ஆதரித்ததற்காக அவருடைய விசா ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து தாமாகவே நாட்டை விட்டு வெளியேறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.