ட்ரம்ப், மோடி எக்ஸ் தளம்
உலகம்

ட்ரம்பின் கூடுதல் வரிவிதிப்பு இன்றுமுதல் அமல்.. பாதிப்பைச் சந்திக்கும் இந்திய தொழில் துறைகள்!

இந்திய இறக்குமதி பொருட்களுக்கான 25% அபராத வரி இன்று முதல் அமலுக்கு வருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

Prakash J

அமெரிக்கா இந்தியாவிற்கு விதித்துள்ள 50% கூடுதல் வரி, ஜவுளி, காலணிகள், தோல் உள்ளிட்ட ஏற்றுமதிகளை கடுமையாக பாதிக்கும். இதனால், தமிழகத்தின் திருப்பூர், நொய்டா, சூரத் போன்ற நகரங்களில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் முடங்கும் அபாயம் உள்ளது. ட்ரம்பின் நடவடிக்கையால், இந்தியாவின் 48.2 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் வரிவிதிப்புக்கு உள்ளாகும்.

இன்றுமுதல் அமலுக்குவரும் அமெரிக்காவின் கூடுதல் வரி

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளாத நாடுகளுக்குப் புதிய வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்தியாவிற்கும் 50% வரி விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 25 சதவீத வரி விதிக்கப்பட்ட நிலையில், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாகவும், அதன்மூலம் உக்ரைனில் போரை தூண்டுவதாகவும் இந்தியா மீது குற்றம்சாட்டி, கூடுதலாக 25% வரியை அமெரிக்கா விதித்தது. இதன்மூலம், அமெரிக்க அரசு இந்திய பொருட்களுக்கான வரியை, மொத்தமாக 50 சதவீதமாக உயர்த்தியுள்ளது. ஆரம்ப வரி ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், 25% அபராத வரி இன்று முதல் அமலுக்கு வருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

இதனால், இந்தியாவின் ஜவுளி, காலணிகள், தோல், ரசாயனங்கள், நகைகள், ஜெம் கற்கள், மின்னணு பொருட்கள், கடல்சார்ந்த உணவுப் பொருட்களின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கும் என தொழில் துறையினர் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக தமிழகத்தின் திருப்பூர், நொய்டா, சூரத் ஆகிய நகரங்களில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் முடங்கும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. ட்ரம்பின் நடவடிக்கையால், இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் 48.2 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் வரிவிதிப்புக்கு உள்ளாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கையால் தமிழகம்தான் அதிகளவில் பாதிப்பை சந்திக்கக்கூடுமென வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கிரிசில் ரேட்டிங்ஸ் சொல்வது என்ன?

அதேநேரத்தில், ட்ரம்ப் அரசின் இது போன்ற வரி நெருக்கடிகளுக்கு அடி பணியாமல், அதை எதிர்கொள்வதற்கான வலிமையை இந்தியா அதிகரித்துக்கொள்ளும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். அதேசமயம், இழுபறியில் உள்ள அமெரிக்கா, இந்தியா இடையேயான பொருளாதார ஒப்பந்தத்தை இறுதி செய்யும் நடவடிக்கைகளிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

ட்ரம்ப் - மோடி

இதற்கிடையே, ட்ரம்பின் வரி விதிப்பால், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஆயத்த ஆடைத் துறையின் வருவாய் வளர்ச்சி பாதியாகக் குறையக்கூடும் என கிரிசில் ரேட்டிங்ஸ் ((Crisil Ratings)) தெரிவித்துள்ளது. இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கு அமெரிக்காவிற்குச் செல்கிறது. இந்நிலையில், அமெரிக்காவின் 50% வரிவிதிப்பு இந்தியாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கிரிசில் தெரிவித்துள்ளது. இதனால், ஆயத்த ஆடை ஏற்றுமதியில் வங்கதேசம், வியட்நாம் ஆகிய போட்டி நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா பின்தங்கக்கூடும். இதன் காரணமாக, இந்திய ஏற்றுமதியாளர்கள் ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற மற்ற நாடுகளை நோக்கித் தங்கள் வர்த்தகத்தை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று கிரிஸில் குறிப்பிட்டுள்ளது.