US withdrawn b-1b lancer Flights Reuters
உலகம்

உச்சகட்ட பயத்தில் அமெரிக்கா.. திரும்பப் பெறப்பட்ட போர் விமானங்கள்.. உளவுத்துறை சொன்ன பகீர் தகவல்!

உலகின் சக்திவாய்ந்த ராணுவத்தைக் கொண்டுள்ள அமெரிக்கா, ஒரு உளவுத் தகவலுக்கு பயந்து தங்கள் போர் விமானத்தைத் திரும்பப் பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Praveen Joshva L

B-1B லான்சர் வகை விமானங்கள் அமெரிக்க வான்படையின் மிக வேகமான, அதிக அளவிலான ஏவுகணைகள் மற்றும் குண்டுகளைச் சுமந்து செல்லக்கூடிய 'சூப்பர்சோனிக்' (Supersonic) குண்டுவீச்சு விமானமாகும். அமெரிக்க விமானப் படையிலேயே முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் இந்த விமானம் மிகக் குறைந்த உயரத்தில் பறந்து எதிரியின் ரேடார்களில் சிக்காமல் தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது. இதன் காரணமாக அமெரிக்க விமானப்படையின் உலகளாவிய தாக்குதல் பிரிவின் (Air Force Global Strike Command) கீழ் இயங்கும் இந்த விமானங்கள், தேவையைப் பொறுத்து உலகம் முழுவதும் உள்ள முன்னணி தளங்களிலும் சுழற்சி முறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

b-1b lancer Flights

அந்த வகையில், ஐரோப்பாவில் உள்ள நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பிரிட்டனின் குளோஸ்டர்ஷையரில் (Gloucestershire) அமைந்துள்ள RAF விமானதளத்தில் அமெரிக்காவின் B-1B லான்சர் வகை போர் விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

இந்த தளத்தில் உள்ள போர் விமானங்கள் மீது நாசவேலை அல்லது தாக்குதல் நடத்தத் திட்டம் தீட்டப்பட்டதாக அமெரிக்க உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த எச்சரிக்கை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரிட்டனின் RAF விமானதளத்தில் நிறுத்தப்பட்டிருந்த B-1B லான்சர் விமானங்கள் அமெரிக்காவுக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளன. அச்சுறுத்தலுக்கு பயந்து அமெரிக்க விமானங்கள் நெருங்கிய நட்பு நாட்டில் இருந்து திரும்ப அழைக்கப்பட்டுள்ளது அமெரிக்க ராணுவ வரலாற்றில் இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது தற்காலிக ஏற்பாடுதான் என்றும், நேட்டோ அமைப்பின் ஐரோப்பிய வான் எல்லைப் பாதுகாப்பு ஒத்திகைகளில் இது தற்காலிகப் பின்னடைவை ஏற்படுத்தினாலும், அமெரிக்கா தனது பிற ராணுவத் தளங்கள் அல்லது வான்வழி எரிபொருள் நிரப்பும் முறைகள் மூலம் ஐரோப்பிய பாதுகாப்பை உறுதி செய்யும் என கூறப்பட்டுள்ளது.