மிரட்டல் விடுத்த ஈரான்.. திரும்பிய போர் விமானங்கள்.. அச்சத்தில் இங்கிலாந்து, அமெரிக்கா!
இங்கிலாந்தில் விமானத் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் குண்டுவீச்சு விமானங்கள் அனைத்தும், அமெரிக்காவிற்கே திரும்பப் பெறப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திடீரென அவை திரும்பப் பெறப்பட்ட காரணம் என்ன? விரிவாக அலசுகிறது இந்தக் கட்டுரை..
அணு ஆயுதம் தொடர்பாக அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானைத் தாக்கிய நிலையில், அது தற்போது சர்வதேச எண்ணெய் வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியைக் (Strait of Hormuz) கட்டுப்படுத்தும் நோக்கிலும் விரிவடைந்துள்ளது. இதனால், மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில், இங்கிலாந்தில் உள்ள RAF Fairford விமானத் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் பி-1 ரக குண்டுவீச்சு விமானங்கள் அனைத்தையும் அமெரிக்கா திரும்பப் பெற்றுள்ளது. மத்திய கிழக்குப் பகுதியில் நடப்பாண்டு தொடக்கத்தில் ஈரான் - அமெரிக்கா இடையே பதற்றம் தீவிரமடைந்தது.
இதையடுத்து, ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மற்றும் ஹார்மூஸ் ஜலசந்தியில் கப்பல்களைத் தாக்கிய இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்த இங்கிலாந்தில் உள்ள RAF Fairford விமானத் தளத்தை அமெரிக்கா பயன்படுத்தியது.
இங்கிலாந்து அரசின் அனுமதியுடன், அமெரிக்கா தனது இடைக்காலப் போர் நடவடிக்கைகளுக்கும் வான்வழிப் பாதுகாப்பிற்கும் இந்த ஐரோப்பிய தளத்தை ஒரு முக்கிய ஏவுதளமாகப் பயன்படுத்தி வந்தது. நீண்டதூரம் சென்று துல்லியமாகத் தாக்கும் திறன்கொண்ட அமெரிக்காவின் பி-1 லான்சர் (B-1 Lancer) மற்றும் பி-52 (B-52) ரக கனரக குண்டுவீச்சு விமானங்கள் இந்த தளத்தில் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து ஈரானிய இலக்குகளை நோக்கி இயக்கப்பட்டு வந்தன. இதற்கிடையே, ’இங்கிலாந்தின் இந்தத் தளம் ஈரானுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதால் இது ஒரு சட்டப்பூர்வமான இலக்கு’ என்று ஈரானின் புரட்சிகரப் படை (IRGC) பகிரங்கமாக எச்சரித்திருந்தது.
மேலும், கடந்த செப்டம்பர் மாத இறுதியில் இத்தளத்தைக் குறிவைத்து தீவிரவாதத் தாக்குதலுக்குச் சதிதிட்டம் தீட்டப்பட்டதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. தவிர, இதன் பின்னணியில் ஈரானின் ஈடுபாடு இருக்கலாம் என்பதற்கான வலுவான அறிகுறிகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்புக் கருதி அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த அனைத்து குண்டுவீச்சு விமானங்களும் பாதுகாப்பான முறையில் அமெரிக்காவிற்கே மறுபகிர்வு (Redeployment) செய்யப்பட்டுள்ளதாக பென்டகன் உறுதிப்படுத்தியுள்ளது.

