ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய கூட்டுப்படைகளின் தாக்குதலால் கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி மத்திய கிழக்கில் போர் மூண்டது. தொடர்ந்து நடைபெற்ற ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் போர் பதற்றம் அதிகரித்திருந்த நிலையில், ஹார்முஸ் நீரிணை முடக்கப்பட்டது, சர்வதேச பொருளாதாரத்தை சீர்குலைத்திருக்கிறது. இந்தசூழலில் தான், ஏப்ரல் 8-ம் தேதி பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தால் அமெரிக்கா - ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கிறது.
தொடர்ந்து, போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், ஈரானிடம் இருக்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் பிரதான கோரிக்கையாக இருக்கிறது. அதனை ஈரான் ஒத்து கொள்ளாததாலும், லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருதாலும், பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாமலேயே இருந்து வருகிறது.
இதற்கிடயில் தான், நேற்று முன்தினம் ஈரானுடனான போரை நிறுத்த வேண்டும் எனக் கோரி அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையில் ஜனநாயகக் கட்சி தீர்மானம் கொண்டுவந்த நிலையில், 215-கள் ஆதரவுடன் நிறைவேறியிருக்கிறது. எனினும், இத்தீர்மானத்தை ட்ரம்ப் அதிபரின் சிறப்பு அதிகாரத்தைக் கொண்டு ரத்து செய்யமுடியும்.
இந்தசூழலில் தான், நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், ”ஈரான் போரில் ராணுவ ரீதியாகவோ அல்லது ஒப்பந்தம் வாயிலாகவோ எப்படியாவது நாம் வெற்றிப் பெறப்போகிறோம்” எனத் தெரிவித்திருக்கிறார். ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறு குறித்துக் கேட்கப்பட்டபோது, "ஈரான் அமெரிக்கப் படையினரைக் கொன்றால், அந்நாட்டின் மீது மீண்டும் தாக்குதலை தொடங்க ஒரு நல்ல காரணமாக அமையும்" என்று அவர் கூறியிருக்கிறார்.
மேலும், "ஈரானிடமிருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைப் பெறுவதற்கு அந்நாட்டுடன் அமெரிக்காவுக்கு ஒரு ஒப்பந்தம் தேவையில்லை. அதை இப்போதே எங்களால் எடுக்க முடியும்” என எச்சரித்திருக்கும் ட்ரம்ப், ஆனால், அப்படிச் செய்வதற்கு எந்தக் காரணமும் இல்லை எனவும் யுரேனியம் தற்போது பாதுகாப்பாகப் புதைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல, கடந்த ஜூலை 3-ம் தேதி ட்ரம்ப் அளித்த பேட்டி ஒன்றில், ஈரான் உச்சத்தலைவர் மொஜ்தபா காமெனியை சந்திக்க விரும்புவதாக தெரிவித்திருந்தது பேசுபொருளாகியிருந்தது. இதற்கு பதிலளித்துள்ள அவர், மொஜ்தபா கமேனியை சந்திக்க விரும்பவில்லை எனவும் ஈரானும் அமெரிக்காவும் ஒரு உடன்பாட்டிற்கு வந்தால், இருவரும் சந்திப்பது சாத்தியம் எனவும் அது நடந்தால்.. நான் மரியாதையுடன் நடந்துகொள்வேன் எனவும் விளக்கமளித்திருக்கிறார்.