செய்தியாளர் - கார்த்திகேயன்
சேட்ஜிபிடி, ஜெமினி, கிளாட் உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. இந்த ஏ.ஐ தொழில்நுட்பங்களை இயக்க வேண்டுமானால், ஆயிரக்கணக்கான சக்திவாய்ந்த கணினிகள் தேவைப்படுகின்றன. இந்த கணினிகளை இயக்குவதற்கு, அதிக அளவிலான மின்சாரம் மற்றும் தண்ணீரும் தேவைப்படுகிறது. இதுமட்டுமின்றி, ஏ.ஐ. டேட்டா சென்டர்களை அமைப்பதற்கு மிகப்பெரிய நிலப்பரப்பும் தேவைப்படுகிறது. ஆனால், இதற்கு அமெரிக்காவில் உள்ள உள்ளூர் மக்கள் பெரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
எனவே, இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில், விண்வெளியிலேயே டேட்டா சென்டர்களை அமைப்பதற்கு, எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதாவது, ஸ்டார்மைன்ட் என்ற புதிய திட்டத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின்படி, சூரிய ஒளியை பயன்படுத்தி இயங்கும் 10 லட்சம் செயற்கைகோள்களை, பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தி, விண்வெளியையே ஒரு மிகப்பெரிய ஏ.ஐ டேட்டா சென்டர்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு அமெரிக்காவின் மத்திய தொலைத்தொடர்பு ஆணையமான FCC தற்போது அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கியுள்ளது.
இதுபோன்ற மிகப்பெரிய விண்வெளி தரவு மையத் திட்டத்திற்கு வழங்கப்படும் முதல் அனுமதி இதுவாகும். விண்வெளிக்கு அனுப்பப்படும் செயற்கைக்கோள்கள் ஒன்றுடன் ஒன்று லேசர் தொழில்நுட்பம் மூலம் தொடர்புகொண்டு தரவுகளை சேகரிக்கிறது. இந்த தரவுகள், ஸ்டார்லிங்க் உதவியுடன் பூமிக்கு அனுப்புவதன் மூலம், இந்த டேட்டா சென்டர்கள் இயங்கும் என்று சொல்லப்படுகிறது. 10 லட்சம் செயற்கைக்கோள்களை மொத்தமாக அனுப்பாமல், கொஞ்சம் கொஞ்சமாக செலுத்த திட்டமிட்டுள்ள ஸ்பேஸ் எக்ஸ், 2040-க்குள் தங்களது இலக்கை அடைய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் வெற்றிகரமாக நடந்தால், உலகின் தண்ணீரையும், மின்சாரத்தையும் ஏ.ஐ பயன்படுத்துவது, பெருமளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளையில், மனித குலத்துக்கே பாதிப்பை ஏற்படுத்தும் மிகப்பெரிய அபாயமும், இந்த திட்டத்தால் ஏற்படலாம். ஒரு செயற்கைக்கோள் மற்றொரு செயற்கைக்கோளுடன் மோதினால், ஆயிரக்கணக்கான சிறிய துண்டுகள் விண்வெளியில் சிதறக்கூடும். இவை மற்ற செயற்கைக்கோள்களையும் தாக்கலாம். இதனால் தொடர்ச்சியான மோதல்கள் ஏற்பட்டு விண்வெளியின் குறிப்பிட்ட சுற்றுப்பாதைகள் பயன்படுத்த முடியாத நிலைக்குச் செல்லும் அபாயம் உள்ளது. மேலும், அதிக எண்ணிக்கையிலான செயற்கைக்கோள்கள் இரவு வானில் ஒளிர்வதால் வானியல் ஆராய்ச்சிகளும் பாதிக்கப்படலாம். இவ்வாறு பல்வேறு நன்மை மற்றும் தீமைகளுக்கு மத்தியில் இது நடைமுறைப்படுத்தப்பட இருப்பதால், பலரது கவனமும் இந்த திட்டத்தின் மீது விழுந்துள்ளது.