22,500 கி.மீ வேகத்தில் மோதல்.. சுக்கு நூறாக நொறுங்கிய விண்கல்.. நாசாவின் மிரட்டலான செயல்!
செய்தியாளர் - கார்த்திகேயன்
விண்வெளியில் பல நூறு கணக்கான விண்கற்கள் சுற்றி திரிகின்றன. இதில், ஏதாவது ஒரு ஆபத்தான விண்கல் பூமியை மோதினால், மிகப்பெரிய பேரிடர் ஏற்படலாம். இதுமாதிரியான சம்பவம் எதிர்காலத்தில் நடந்தால், பூமியை பாதுகாப்பது எப்படி என்ற கேள்வி நாசா விஞ்ஞானிகளுக்கு எழுந்தது. இதனால், விண்வெளியிலேயே அந்த விண்கலத்தை திசை திருப்ப முடியுமா என்று யோசித்தனர். இதன் அடுத்த கட்டமாக, 2021-ஆம் ஆண்டு நவம்பர் 24-ஆம் தேதி அன்று, DART என்ற விண்கலத்தை உருவாக்கி, விண்வெளிக்கு அனுப்பினர். இந்த விண்கலத்தை, விண்வெளியில் உள்ள பெரிய விண்கல் மீது மோத வைக்க முடிவு செய்தனர்.
அதன்படி, 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 26-ஆம் தேதி அன்று, தனது இலக்கை அடைந்த அந்த விண்கலம், மணிக்கு சுமார் 22 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் வேகத்தில் மோதி, அந்த விண்கல்லை சேதப்படுத்தியது. இருப்பினும், விஞ்ஞானிகளுக்கு பல்வேறு கேள்விகள் எழுந்தன. அந்த விண்கல்லில் எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தனர். இதையடுத்து, ESA என்ற நிறுவனத்தின் உதவியுடன், HERA என்ற விண்கலத்தை உருவாக்கி, சேதம் அடைந்த விண்கல்லை ஆய்வு செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து, 2024-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி அன்று, இந்த HERA விண்கலம், தனது பயணத்தை தொடங்கியது. இந்த விண்கலம், 2026-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், சுக்கு நூறாக நொறுங்கிய அந்த விண்கல்லை அடைந்தது.
இந்நிலையில், விண்கல்லில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த பல்வேறு தரவுகளை, அந்த விண்கலம் அனுப்பியுள்ளது. அதாவது, விண்கல்லில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டிருப்பதும், அதன் வடிவமே பெருமளவில் மாறியிருப்பதும் தெரியவந்துள்ளது. சேதம் அடைந்த விண்கல் மட்டுமின்றி, அதனை சுற்றியுள்ள பாறைத் துண்டுகளையும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். HERA விண்கலத்துடன் ஜூவென்டாஸ் ( Juventas ) , மிலானி ( Milani ) என்ற இரு துணை விண்கலங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதில், பாதிக்கப்பட்ட விண்கல்லின் உட்புற அமைப்பை ஜூவென்டாஸ்-ம், மேற்ரப்பில் உள்ள தூசுகள் மற்றும் கணிமங்களை மிலானியும் ஆய்வு செய்ய உள்ளது. எதிர்காலத்தில் திடீரென ஆபத்து வந்தால், அப்போது என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பதை விட, முன்கூட்டியே அதற்கான தீர்வுகளை கண்டுபிடிப்பது சரி என்று விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள். அதனால் தான், இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

