அமெரிக்கா முகநூல்
உலகம்

அமெரிக்க அரசின் கொள்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்த மாணவர்கள்... விசா தடை செய்ய அதிரடி நடவடிக்கை!

அமெரிக்க அரசின் கொள்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்த மாணவர்களின் விசா ரத்து?

திவ்யா தங்கராஜ்

அமெரிக்க அரசின் கொள்கைகளுக்கு எதிராக தங்களது கருத்துகளை வெளியிட்ட மாணவர்களின் விசாக்களை உடனடியாக ரத்து செய்யும் முயற்சியில் அமெரிக்க அரசு ஈடுபட்டுள்ளது. ஒரு லைக் போட்டாலே போதும், அவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்படும் சூழல் உருவாகியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் உட்பட நூற்றுக்கணக்கான சர்வதேச மாணவர்களுக்கு வெளியுறவுத்துறையிலிருந்து திடீரென விசா ரத்து மின்னஞ்சல் வந்துள்ளது.

அதாவது வெளிநாட்டு மாணவர்கள் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி வளாகப் போராட்டங்களில் ஈடுபடுவதை தாண்டி ஆன்லைனில் அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதற்காகவும் குறிவைக்கப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது. அவ்வாறு அமெரிக்க அரசு அல்லது அரசின் கொள்கைகளுக்கு எதிராக போடப்பட்ட சமூக ஊடகப் பதிவில் ஒரு லைக், ஷேர் அல்லது கருத்து தெரிவித்து இருந்தாலே போதும். அந்த மாணவர்களின் விசாக்களை ரத்து செய்து நாட்டை விட்டு வெளியேற்றும் முயற்சியில் அமெரிக்க அரசு உடனடியாக ஈடுபடும்.

இந்த முயற்சி அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தலைமையில் நடக்கிறது. Catch and Revoke என அழைக்கப்படும்பிரத்யேகமாக இதற்கென ஒரு செயலியை உருவாக்கியுள்ளனர். ஹமாஸ் அல்லது பிற நியமிக்கப்பட்ட பயங்கரவாத குழுக்களை ஆதரிப்பதாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டினரின் விசாக்களை ரத்து செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மூன்று வாரங்களில், ஏற்கனவே 300 க்கும் மேற்பட்ட மாணவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் 11 லட்சம் வெளிநாட்டு மாணவர்களில் 3.31லட்சம் மாணவர்கள் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் வெளியுறவுத்துறையால் குறிவைக்கப்படும் மாணவர்ளுக்கு பின்வரும் மின்னஞ்சல் அனுப்பப்படுகிறது. அதாவது, "உங்கள் F-1 விசா அமெரிக்க குடிவரவு மற்றும் தேசிய சட்டத்தின் பிரிவு 221(i) இன் படி, திருத்தப்பட்டபடி ரத்து செய்யப்பட்டது."

முன்னதாக கயானாவில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது,அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் பின்வரும் கருத்துக்களை கூறியிருந்தார். ​​“நாங்கள் மாணவர்களுக்கு விசா கொடுத்தது, படித்து பட்டம் பெறுவதற்காகத்தான், பல்கலைக்கழக வளாகத்திற்குள் கலவரத்தை தூண்டுவதற்கு அல்ல” என குறிப்பிட்டார். உலகில் எந்த நாடும் அவர்களின் நாட்டில் பிறர் வந்து கலவரம் செய்வதை விரும்பாது. நீங்கள் எந்த அமைப்பை சேர்ந்தவராக இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. தவறான செயலில் ஈடுபட்டால் உங்கள் விசாவை ரத்து செய்வோம் என கூறியிருந்தார்.

அமெரிக்க அரசின் இந்த செயல் வெளிநாட்டு மாணவர்களின் கல்வியில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது.