அமெரிக்கப் பாதுகாப்புத் துறை (The Pentagon) தனது மிக முக்கியமான மற்றும் மிகப் பழமையான இராணுவக் கட்டளைப் பிரிவான 'யு.எஸ். இந்தோ-பசிபிக் கமாண்ட்' (US Indo-Pacific Command - USINDOPACOM) என்ற பெயரிலிருந்து 'இந்தோ' (Indo) என்ற சொல்லை நீக்கியுள்ளது. மேலும், இனி இப்பிரிவு மீண்டும் அதன் பழைய பெயரான 'யு.எஸ். பசிபிக் கமாண்ட்' (US Pacific Command - USPACOM) என்று அழைக்கப்படும் என அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
1947ஆம் ஆண்டு அதிபர் ஹாரி ட்ரூமன் காலத்தில் 'யு.எஸ். இந்தோ-பசிபிக் கமாண்ட்' என்ற இராணுவக் கட்டளைப் பிரிவு உருவாக்கப்பட்டது. இந்த இராணுவப் பிரிவு, 70 ஆண்டுகளுக்கும் மேலாக 'பசிபிக் கமாண்ட்' என்றே அழைக்கப்பட்டது. பின்னர், 2018-இல் டொனால்டு ட்ரம்பின் தன்னுடைய முதல் அதிபர் பதவிக்காலத்தின்போது, இந்தியப் பெருங்கடல் பகுதியின் முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டும், இந்தியாவுடனான பாதுகாப்பு உறவை வலுப்படுத்தவும் 'இந்தோ-பசிபிக் கமாண்ட்' எனப் பெயர் மாற்றப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் ஆட்சிக்கு வந்த டொனால்டு ட்ரம்பின் தற்போதைய நிர்வாகம், 8 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட அந்த முடிவை மாற்றி, மீண்டும் பழைய பெயரே (USPACOM) அழைக்கப்பட வேண்டும் என அறிவித்துள்ளது. அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின்
அதிகாரப்பூர்வ விளக்கத்தின்படி, ”இந்த முடிவு வரலாற்று பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் ஒரு நடவடிக்கையாகும். இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய இந்த இராணுவக் கட்டளையின் ஆழமான வரலாற்று வேர்களைக் கௌரவிக்கவும், பசிபிக் பிராந்தியத்தில் பணியாற்றும் வீரர்களிடையே ஒரு கூட்டு உத்வேகத்தை உருவாக்கவும் இப்பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில், இந்தப் பெயர் மாற்றம் என்பது வெறும் அடையாளபூர்வமானது மட்டுமே என்று அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது. அந்த வகையில், அமெரிக்காவின் மேற்கு கடற்கரையிலிருந்து இந்தியாவின் மேற்கு எல்லைவரை பரந்து விரிந்துள்ள இந்த கமாண்டின் செயல்பாட்டு எல்லையில் (Area of Responsibility) எந்த மாற்றமும் இல்லை. உலகப் பரப்பில் சுமார் 52% பகுதியை இப்பிரிவு தொடர்ந்து கண்காணிக்கும் எனக் கூறப்படுகிறது.
மேலும் அமெரிக்கா, இதனைப் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் செயல் என்று கூறினாலும், உலக அரசியல் அரங்கில் இது சில விவாதங்களை எழுப்பியுள்ளது. ஆக்ரோஷமாகி வரும் சீனாவை எதிர்கொள்வதற்காக இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் (IOR) உள்ள தனது திட்டங்களை அமெரிக்கா கைவிடுகிறதா எனக் கேள்வி எழுகிறது. மேலும், மத்திய கிழக்கில் தனது பல தசாப்தகால கூட்டாளிகளை அமெரிக்கா கைவிடுவதாகவும், குவாட் அமைப்பைப் பின்னுக்குத் தள்ளுவதாகவும் பார்க்கப்படுகிறது.