பஹல்காம் எக்ஸ் தளம்
உலகம்

பஹல்காம் தாக்குதல் | தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் குழுவை பயங்கரவாத அமைப்பாக அறிவித்த அமெரிக்கா!

தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் குழுவை பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் அமெரிக்கா இணைத்துள்ளது.

Prakash J

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான 'தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்' பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த நிலையில், தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் குழுவை பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் அமெரிக்கா இணைத்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, ”தேசிய பாதுகாப்பு நலனைப் பாதுகாக்கவும், பயங்கரவாதத்துக்கு எதிராகவும், பஹல்காம் தாக்குதலுக்கு நீதியை நிலைநாட்டுவதிலும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் உறுதிப்பாட்டை இந்த நடவடிக்கை நிரூபிக்கிறது. 2008 ஆம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட லஷ்கர்-ஏ-தொய்பாவின் தாக்குதலுக்கு பிறகு, இந்தியாவில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதல் இதுவாகும். இந்திய படைகளுக்கு எதிரான பல தாக்குதலுக்கு ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் பொறுப்பேற்று இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

பஹல்காம்

இந்த நடவடிக்கை குறித்து அமெரிக்காவுக்கான இந்திய தூதரகம், “இந்த நடவடிக்கை இந்தியா - அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்புக்கு மற்றொரு வலுவான நிரூபணம். ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்டை வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்பாகவும் உலகளாவிய பயங்கரவாத அமைப்பாகவும் பட்டியலிட்டதற்கு அமெரிக்க வெளியுறவுத் துறையைப் பாராட்டுகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக, தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் அமைப்பை, ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரவாதக் குழுவாகப் பட்டியலிடுவதற்கான முயற்சிகளை இந்தியா முடுக்கிவிட்டது.