பீட் ஹெக்ஸெத் reuters
உலகம்

தொடரும் போர் | ”எதையும் நாங்க முடிவு பண்ணணும்..” - ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா!

மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்று வரும் போர், ஒரு முடிவே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

Prakash J

ஈரான் மீண்டும் மிகப்பெரிய தாக்குதலை எதிர்கொள்ளும் என்றும், வளைகுடாப் போர் அமெரிக்காவின் நிபந்தனைகளின்படியே முடிவுக்கு வரும் என்றும் அமெரிக்கா மீண்டும் ஈரானுக்கு எச்சரித்துள்ளது.

அணு ஆயுத ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாத நிலையில், அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து அந்நாட்டைச் சில்லுசில்லாகப் பெயர்த்து வருகிறது. தவிர, அந்நாட்டு உச்சபட்ச தலைவர் முதல் பலரையும் அழித்துள்ளது. இதற்கெல்லாம் பதிலடி கொடுத்துவரும் ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகிறது. அதேசமயம், ஈரான் மீதான தாக்குதலையும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தீவிரப்படுத்தி வருகிறது. இந்தப் போரால் உலகம் முழுவதும் எரிவாயு, பொருளாதாரம் உள்ளிட்டவை சிக்கலைச் சந்தித்து வருகின்றன. இதையடுத்து, இந்தப் போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றன. எனினும், போர் ஒரு முடிவே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

US - Iran

இந்த நிலையில், ஈரான் மீண்டும் மிகப்பெரிய தாக்குதலை எதிர்கொள்ளும் என்றும், வளைகுடாப் போர் அமெரிக்காவின் நிபந்தனைகளின்படியே முடிவுக்கு வரும் என்றும் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், ”எங்கள் திறன்கள் தொடர்ந்து வலுப்பெற்று வருகின்றன, ஈரானின் திறன்கள் தொடர்ந்து சீரழிந்து வருகின்றன. ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டன. கார்க் தீவில் உள்ள ஈரானின் இராணுவத் திறன்கள் மீதான தாக்குதல்கள், அந்நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் கட்டுப்பாட்டை அமெரிக்காவிற்கு அளிக்கின்றன. ஈரானில் இதுவரை 7,000-க்கும் மேற்பட்ட இலக்குகளை அமெரிக்க ராணுவம் தாக்கியுள்ளது. ஈரான் மீண்டும் மிகப்பெரிய தாக்குதலை எதிர்கொள்ளும். வளைகுடாப் போர் அமெரிக்காவின் நிபந்தனைகளின்படியே முடிவுக்கு வரும். ஈரானின் இராணுவத்தில் தலைமைப் பதவிகள் மேலும் மேலும் நிலையற்றதாகி வருகின்றன.

பீட் ஹெக்ஸெத்

அமெரிக்கப் படைகள் ஈரானின் சொத்துக்களை உலகின் வேறு எந்த இராணுவமும் செய்ய முடியாத வகையில், திட்டமிட்டு, இரக்கமின்றி மற்றும் மிக அதிக அளவில் குறிவைத்துத் தாக்குகின்றன. தனது இலக்குகள் நிறைவேறும் வரை அமெரிக்கா தனது நடவடிக்கைகளைத் தொடரும். மோதல் தொடங்கியதிலிருந்து அமெரிக்கப் படைகளுக்கு எதிரான ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ஒருவழி ட்ரோன் தாக்குதல்கள் 90% குறைந்துள்ளன. புதிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் ஈரானின் திறனும் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கலாம். அமெரிக்கா குறைந்தது 120 ஈரானிய கடற்படைக் கப்பல்களைச் சேதப்படுத்தியுள்ளது அல்லது மூழ்கடித்துள்ளது. ஈரானின் 11 நீர்மூழ்கிக் கப்பல்களும் அழிந்துவிட்டன” எனத் தெரிவித்துள்ளார்.