எங்க அடிச்சா வலிக்கும்? அமெரிக்காவின் ரகசியம் தெரிந்த ஈரான்.. தாக்குதலுக்கு இரையாகும் UAE!
போருக்கு முன்புவரை, துபாய், அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிந்த நிலையில், இன்று, அந்நாடுகள் ஈரானிய ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களால் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளன. அதிலும் வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகத்தையே ஈரான் தொடர்ந்து குறிவைத்து வருகிறது. ஏன், அந்த நாட்டை மட்டும் ஈரான் குறிவைக்கிறது. அதன் பின்னணியில் இருக்கும் காரணம் என்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்ப்போம்.
அணு ஆயுத ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாத நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் ஈரான் நிலைகுலைந்துள்ளது. அந்நாட்டின் உச்சத்தலைவராக இருந்த அயதுல்லா காமேனி, எதிரிகளின் ஏவுகணைகளுக்கு இரையானார். இந்த மரணத்திற்குப் பதிலடி கொடுப்பதாக சவால்விட்ட ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகிறது. அதேசமயம், ஈரான் மீதான தாக்குதலையும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், ஈரான் தாக்கத் தொடங்கிய நாள் முதல் வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகத்தையே அதிகம் குறிவைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் தொடர் தாக்குதலால், அங்கு அமெரிக்கத் தளங்கள் மட்டுமின்றி, துறைமுகங்கள், விமான நிலையங்கள், பொருளாதார மையங்கள், எண்ணெய்க் கிடங்குகள் என அனைத்துக்கும் குறிவைக்கப்பட்டு வருகின்றன.
மார்ச் 15 நிலவரப்படி, ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்புப் பிரிவுகள் 298 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 15 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 1,606 ஆளில்லா விமானங்களைச் சமாளித்து இருப்பதாக அபுதாபியின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களில் 65% ஐக்கிய அரபு அமீரகத்தை நோக்கியே குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கைகள், கத்தார், பஹ்ரைன், சவூதி அரேபியா மற்றும் குவைத் போன்ற அதன் அண்டை நாடுகள் மீதான ஈரானின் தாக்குதலைவிடப் பன்மடங்கு அதிகமாகும்.
இத்தகைய சூழலில், ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் மீது குறிவைக்கப்படுவதற்குக் காரணம், அந்நாட்டில் உள்ள அல் தஃப்ரா விமானப்படைத் தளம்தான். அந்த தளம், முக்கிய அமெரிக்க ராணுவ வசதிகளைக் கொண்டிருக்கிறது. இதனால், அமெரிக்காவை நேரடியாகத் தாக்க முடியாத நிலையில், அமெரிக்க நலன்களைச் சார்ந்திருக்கும் நாடுகளையே ஈரான் குறிவைக்கிறது. அந்த வகையிலேயே ஐக்கிய அரபு அமீரகம் ஈரானுக்கு இலக்காகி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகம், ஓர் அமெரிக்கத் தளத்தை மட்டும் கொண்டிருக்கவில்லை. அது அமெரிக்காவின் முக்கிய பாதுகாப்புப் பங்காளியாகவும் விளங்குகிறது. அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இரு நாடுகளுக்கிடையே கூட்டுப் பயிற்சிகள், ஆயுதங்கள் உள்ளிட்டவை தொடர்பாக கடந்த 2024ஆம் ஆண்டே ஒப்பந்தமானது.
மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தைத் தாக்குவதன்மூலம், அமெரிக்காவின் பிராந்திய நட்பு நாடுகளுக்கான செலவுகளை அதிகரிக்கக் கூடும். தவிர, தம் நாட்டுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளுக்கான ஆதரவும் சிதையக்கூடும் என ஈரான் நம்புகிறது. இதையடுத்தே ஐக்கிய அரபு அமீரகத்தை ஈரான் தொடர்ந்து குறிவைக்கிறது. இதைவிட இன்னொரு முக்கியக் காரணமும் இருக்கிறது. அமீரகம், தன்னை மேற்கத்திய நாடுகளுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் இடையே ஒரு பாலமாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. இதன்மூலம் அமீரகம் நிதி, சுற்றுலா, தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகத்தில் ஓர் உலகளாவிய மையமாகத் திகழ்கிறது. இவையனைத்தின் வளர்ச்சிக்கும் அமெரிக்கா ஆதரவுக் கரம் நீட்டி வருகிறது. இதை ஈரான் நீண்டகாலமாகவே எதிர்த்துவருகிறது. இதனாலேயே அமீரகத்தைத் தொடர்ந்து ஈரான் பழிவாங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

