அமெரிக்க உச்ச நீதிமன்றம் ட்ரம்பின் வரி விதிப்பை ரத்து செய்துள்ளதால், இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. முன்னதாக, இந்தியப் பொருட்கள் மீது ட்ரம்ப் விதித்த 50 சதவீத வரியைக் குறைக்க, ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைக் குறைத்தல் மற்றும் அமெரிக்கப் பொருட்களைப் பூஜ்ய வரியில் இறக்குமதி செய்தல் போன்ற கடுமையான நிபந்தனைகளுக்கு இந்தியா உடன்பட்டிருந்தது. இதன் மூலம் பிப்ரவரி முதல் வாரத்தில் எட்டப்பட்ட தற்காலிக ஒப்பந்தப்படி, இந்தியா மீதான வரி 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. வரும் மார்ச் மாதம் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகவிருந்த நிலையில், நீதிமன்றத் தீர்ப்பால் இந்தியாவின் வரி விகிதம் தொழில்நுட்ப ரீதியாகப் பழைய 3.5 சதவீத நிலைக்கே தற்போது திரும்பியுள்ளது.
ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் அதிருப்தியடைந்த ட்ரம்ப், சட்டப் பிரிவு 122-ஐப் பயன்படுத்தி அனைத்து நாடுகள் மீதும் மீண்டும் 10 சதவீத வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். அதேசமயம், "இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இல்லை; இந்தியா அமெரிக்கப் பொருட்களைப் பூஜ்ய வரியில் இறக்குமதி செய்யும், அமெரிக்கா இந்தியப் பொருட்களை 18 சதவீத வரியில் இறக்குமதி செய்யும்" என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். இந்த ஒப்பந்தம் இன்னும் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்தாகாத நிலையில், அமெரிக்காவின் கடும் நிபந்தனைகளை அப்படியே ஏற்க வேண்டிய அவசியம் இனி இந்தியாவுக்கு இல்லை என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு ட்ரம்ப் விதித்துள்ள புதிய வரியைக் கணக்கிட்டாலும், இந்தியாவின் மொத்த வரிச் சுமை 13.5 சதவீதம் மட்டுமே இருக்கும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்தச் சூழலில், அடுத்த வாரம் வாஷிங்டன் செல்லவுள்ள இந்திய அதிகாரிகள் குழு, நீதிமன்றத் தீர்ப்பால் கிடைத்துள்ள இந்தச் சாதகமான சூழலைப் பயன்படுத்தி வலுவாகப் பேரம் பேசும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.