ஹார்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்களை பாதுகாக்கும் பெயரில், ஈரானின் ராணுவ கட்டுப்பாட்டு மையங்கள், கடற்படை திறன்கள், ஏவுகணை மற்றும் ட்ரோன் ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தொடர்ந்து 10 இரவுகள் வான்வழித் தாக்குதல் நடத்தியது. ஜூலை 20 இரவு 9 மணிக்கு முடிந்த இந்த நடவடிக்கையால், ஈரானின் தாக்குதல் திறனை குறைத்ததாகவும், எதிர்காலத் தாக்குதல்களுக்கு அமெரிக்கப் படைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஈரான் - அமெரிக்கா இடையேயான போரானது அமைதி ஒப்பந்தத்தின் பிறகும் தொடர்ந்து வருகிறது. ஹார்முஸ் நீரிணை மீதான அதிகாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் இரண்டு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்திவருகின்றன.
இந்நிலையில் தாக்குதல் நடத்தப்படுவது குறித்து தெரிவித்திருக்கும் அமெரிக்க மத்திய கட்டளையகம், ஹார்முஸ் நீரிணையில் பயணம் செய்யும் வர்த்தகக் கப்பல்கள் மீதான ஈரானின் தாக்குதல் திறனைக் குறைக்கும் நோக்கில், அந்நாட்டின் மீது தொடர்ச்சியாக 10-வது இரவாக நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்கள் நிறைவடைந்துள்ளதாக அறிவித்துள்ளது. ஜூலை 20 அன்று இரவு 9:00 மணிக்கு நிறைவடைந்த இந்தத் தாக்குதலில், ஈரானின் ராணுவக் கட்டுப்பாட்டு மையங்கள், கடற்படைத் திறன்கள், ஏவுகணை மற்றும் ட்ரோன் ஏவுதளங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை இலக்கு வைத்து அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தின.
மே தொடக்கத்திலிருந்து இதுவரை, இந்த முக்கியமான கடல் வழியில் சுமார் 450 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயைச் சுமந்து சென்ற ஏறத்தாழ 900 வணிகக் கப்பல்கள் பாதுகாப்பாகக் கடக்க அமெரிக்கப் படைகள் உதவியுள்ளதாக CENTCOM தெரிவித்துள்ளது.பொதுமக்கள் பயணிக்கும் வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் மேற்கொண்டு நடத்தும் எந்தவொரு தாக்குதலுக்கும் உடனடி பதிலடி கொடுக்க அமெரிக்கப் படைகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.