donald trump, h1b visa x page
உலகம்

H1b visa கட்டணம்.. சற்று ஆறுதலை அளித்த அமெரிக்க அரசு.. யாருக்கு நன்மை?

அமெரிக்க அரசு, ஹெச்1பி விசா கட்டணம் குறித்து வெளியிட்டிருக்கும் வழிகாட்டுதல் சற்று ஆறுதலைத் தருவதாக அமைந்துள்ளது.

Prakash J

அமெரிக்க அரசு ஹெச்1பி விசா கட்டணம் குறித்து வெளியிட்டிருக்கும் வழிகாட்டுதல் சற்று ஆறுதலைத் தருவதாக அமைந்துள்ளது.

அமெரிக்க அரசு ஹெச்1பி விசாகட்டணம் குறித்து வெளியிட்டிருக்கும் வழிகாட்டுதல், அமெரிக்காவில் வசித்துவரும் ஆயிரக்கணக்கான இந்திய தொழில் வல்லுநர்களுக்கும் மாணவர்களுக்கும் சற்று நிம்மதி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. அமெரிக்காவில் தங்கி வேலை செய்வதற்காக, குறிப்பிட்ட துறையில், திறம்பெற்ற நிபுணர்களுக்கு மட்டுமே தற்காலிகமாக அனுமதிக்கப்படும் H1B விசா விண்ணப்பக் கட்டணத்தைப் பன்மடங்கு உயர்த்தி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். ”H1B விசாவில் ஒருவருக்கு பணி அளிக்க வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட நிறுவனம் அவருக்காக 1 லட்சம் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.90 லட்சம்) கட்டணம் செலுத்த வேண்டும்” என்ற உத்தரவை அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் பிறப்பித்திருந்தார்.

donald trump

ஹெச்-1பி விசா காரணமாக வேலை இழக்கும் அமெரிக்கர்களை பாதுகாக்கவே விசா கட்டணம் உயர்த்தப்பட்டதாக அமெரிக்க அரசு விளக்கம் அளித்திருந்தது. மேலும் இது, செப்டம்பர் 21 முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், அடுத்த 12 மாதங்கள் வரை தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால், இந்தியர்கள் அதிகளவில் பாதிக்கப்படும் எனக் கூறப்படும் நிலையில், இதற்கான மாற்று வழிகளையும் அவர்கள் தேடி வருகின்றனர்.

மறுபுறம், அமெரிக்காவிலேயே இந்தக் கட்டண உயர்வுக்கு மருத்துவர்கள் வட்டாரத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தவிர, இதுதொடர்பாக அமெரிக்க வர்த்தக சபையும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது.

h1b visa

இந்த நிலையில், அமெரிக்க அரசு ஹெச்1பி விசா கட்டணம் குறித்து வெளியிட்டிருக்கும் வழிகாட்டுதல் சற்று ஆறுதலைத் தருவதாக அமைந்துள்ளது. அதன்படி, ஏற்கெனவே, ஹெச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கும், செப்டம்பர் 21ஆம் தேதிக்கு முன் ஹெச்1பி விசாவுக்கு விண்ணப்பித்தவர்களுக்கும் இந்தக் கட்டணம் பொருந்தாது என்று அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவை துறை தெளிவுபடுத்தியுள்ளது. அதேபோல், ஏற்கெனவே இந்த விசா வைத்திருப்பவர்கள் விசாவை புதிப்பிக்க, நீட்டிக்க, அதன் நிலையை மாற்ற புதிய கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்றும் ஹெச்1 பி விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவுக்கு வெளியே பயணிக்க எந்தத் தடையும் இல்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இது, அமெரிக்காவில் சர்வதேச மாணவர்களின் மிகப்பெரிய ஆதாரமாக இருக்கும் இந்திய மாணவர்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக வருகிறது. 2024ஆம் ஆண்டில் 70% H-1B விசாக்கள் இந்திய நாட்டினருக்கு வழங்கப்பட்டதால், இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் இது ஒரு நிவாரணமாகப் பார்க்கப்படுகிறது.