ஈரான் மீதான அமெரிக்கா , இஸ்ரேல் தாக்குதல்கள் பிப்ரவரி 28 அன்று தொடங்கியது. போர் தொடங்கியதிலிருந்து, வளைகுடா பகுதியில் அமெரிக்காவுக்கு உதவி செய்த பல நாடுகளின் மீது தாக்குதல்களை நடத்தியது ஈரான். சேமிப்புக் கிடங்குகள், செயல்பாடுகளை நிர்வகிக்கும் கட்டளை மையங்கள், விமான தளங்கள் மற்றும் செயற்கைக்கோள் தகவல் தொடர்புக்குப் பயன்படுத்தப்படும் அமைப்புகள் உள்ளிட்ட குறைந்தது ஏழு நாடுகளில் உள்ள முக்கியமான அமெரிக்காவின் இராணுவத் தளங்களைத் தாக்கியுள்ளது ஈரான் ராணுவம் .
மேலும், இராணுவ நகர்வு மற்றும் கண்காணிப்புக்கு இன்றியமையாத ஓடுபாதைகள், ரேடார் அமைப்புகள் மற்றும் சில விமானங்களையும் சேதப்படுத்தியது ஈரான் . ஒரு சந்தர்ப்பத்தில், சக்திவாய்ந்த அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகள் இருந்தபோதிலும், ஒரு பழைய ஈரானிய F-5 ரக போர் விமானத்தில் ஊடுருவி தாக்குதலை நடத்தியது.
ஈரான் நடத்திய தாக்குதல்களால் உண்மையில் எவ்வளவு சேதம் ஏற்பட்டது என்பது குறித்த முழு விவரங்களையும் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை இன்னமும் வெளியிடவில்லை. அப்பகுதியில் இராணுவ நடவடிக்கைகளைக் கையாளும் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு கூட, சேதத்தின் அளவு குறித்துக் கருத்துத் தெரிவிக்க மறுத்துள்ளது .
வெளிப்படைத்தன்மை இல்லாததால் சில குடியரசுக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கோபமும் விரக்தியும் அடைந்துள்ளனர். பல வாரங்களாகக் கேட்டு வந்தபோதிலும், தங்களுக்கு இன்னும் முழுமையான விவரங்கள் தெரியவில்லை என்றும் கூறிவருகிறது என்று NBC செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த மோதல் தொடங்கிய முதல் 3 வாரங்களில் மட்டும் ஈரானின் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களால் அமெரிக்காவிற்கு சுமார் 1.4 பில்லியன் டாலர் முதல் 2.9 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக the wall street journal செய்தி வெளியிட்டிருந்தது.
பாரசீக வளைகுடாவில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களும் உபகரணங்களும், ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டதை விட சமீபத்திய ஈரானியத் தாக்குதல்களால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்று NBC செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் இதுவரை பகிரங்கமாகப் பகிரப்பட்ட சேதத்தின் அளவைவிட மிகவும் அதிகமான சேதம் ஏற்பட்டிருக்கிறது என்றும், அதைச் சீரமைக்க பல பில்லியன் டாலர்கள் செலவாகும் எனவும் NBC செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.