Alliance of the Periphery Rokas Tenys
உலகம்

சுற்றி வளைக்கப்படும் ஈரான்.. இஸ்ரேலின் வலைக்குள் சிக்கியது எப்படி? அமெரிக்கா போட்ட Master Plan!

ஈரானின் அண்டை நாடுகள் அனைத்தும் அதற்கு எதிராக மாறியுள்ள நிலையில், இதன் பின்னணியில் அமெரிக்கா, இஸ்ரேலின் திட்டம் எப்படி செயல்பட்டது என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

Praveen Joshva L

5 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல், அமெரிக்க படைகளுக்கும் ஈரானுக்கும் நடக்கும் மோதல் நாளுக்குநாள் உக்கிரம் அடைந்து வருகிறது. போரின் முதல் நாளிலேயே தங்களது உச்சபட்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனியின் இழப்பால் கடும் ஆத்திரம் அடைந்த ஈரானின் ராணுவம், அமெரிக்க நிலைகள் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் தாக்குதல் நடத்தி வருகின்றது.

இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் போர் தீவிரம் அடைந்துள்ளது. ஈரான் ராணுவம் சவுதி அரேபியா, ஓமன், கத்தார், குவைத், பக்ரைன், ஈராக், சைப்ரஸ் ஆகிய நாடுகளைத் தாக்கிவரும் நிலையில், இந்த தாக்குதலுக்கு அந்நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, ஈரானுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

iran atttack

இந்தச் சூழலில் ஈரான், அஜர்பைஜான் நாட்டையும் தாக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் ட்ரோன்கள் அஜர்பைஜானின் நக்ஷிவன் (Nakhchivan) சர்வதேச விமான நிலையத்தை தாக்கியுள்ளது. இதற்கு அஜர்பைஜான் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், ஈரான் தனது அண்டை நாடுகள் மீது நடத்தும் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேலின் ராஜதந்திரம் உள்ளதாக கூறப்படுகிறது. ஈரானை தனிமைப்படுத்தும் விதமாக பிற அரபு நாடுகளுடன் இஸ்ரேல் ஆபிரகாம் உடன்படிக்கையை மேற்கொண்டு வந்தது. மேலும் பெரிஃபெரி அலையன்ஸ் (Alliance of the Periphery) என்கிற பெயரில் ஈரானைச் சுற்றியுள்ள நாடுகளிடம் உறவையும் வளர்த்து வந்தது.

இஸ்ரேல் பிரதமர்

இந்தச் சூழலில் கடந்த சில நாட்களாக சீனாவின் உதவியோடு ஈரானுக்கு பல ஆண்டுகளாக விரோதியாக இருந்த சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளோடு ஈரான் தனது உறவை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது.

ஒருவேளை ஈரானுக்கும், பிற அரபு நாடுகளுக்கும் இடையே பதற்றம் குறைந்தால், அந்த பகுதியில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து, பிராந்தியத்தில் அமெரிக்காவின் செல்வாக்கு குறையும். மேலும் பாதுகாப்புக்காக அந்த நாடுகள் அமெரிக்காவைச் சார்ந்து இருப்பதும் குறையும்.

இந்தச் சூழலிலேயே இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஈரான் உள்நாட்டு கலவரம் மற்றும் அணுஆயுத உற்பத்தியை காரணமாக கூறி, ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளன. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் அமெரிக்க தளங்கள் உள்ள அரபு நாடுகள் மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

ஈரானின் இந்த தாக்குதல் காரணமாக அரபு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளதோடு, மீண்டும் இந்த நாடுகள் ஈரானை அச்சுறுத்தலாக மாற்றும் சூழலும் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நாடுகள் அமெரிக்காவின் பாதுகாப்பை நோக்கி மீண்டும் நகரும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ராஜதந்திரம் காரணமாக, ஈரான் அந்த பிராந்தியத்தில் மீண்டும் தனித்து விடப்பட்ட நிலையில், ஈரானைச் சுற்றி இருக்கும் அனைத்து நாடுகளும் ஈரானுக்கு எதிராக மாறியுள்ள அசாதாரண நிலையும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அரபு நாடுகளில் இருக்கும் அமெரிக்க நிலைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது ஒரு தவறான அணுகுமுறையாகவே பார்க்கப்படுகிறது.