ஹவாய் அருகே ஜான்ஸ்டன் அடோல் (Johnston Atoll) எனும் தீவு இருக்கிறது. இங்கு ஹைப்பர்சோனிக் ராக்கெட்டுகளின் மூலம் சரக்குகளை விநியோகம் செய்வதற்கான புதிய சோதனைத் திட்டத்தை எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அமெரிக்க விமானப்படை மேற்கொள்ள இருந்தது. ஆனால், தற்போது அந்தத்திட்டம் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹவாயிலிருந்து தென்மேற்கே கிட்டத்தட்ட 800 மைல்களுக்கு அப்பால் இருக்கிறது Johnston Atoll எனும் தீவு. இந்த Johnston Atoll எனும் தீவு 2.5 சதுர கிமீ பரப்பளவில் அமைந்திருக்கும் மக்கள் வசிக்காத தீவு.. இந்தத் தீவைச் சுற்றிலும் 570,000 சதுர மைல்களுக்கு கடல் மட்டுமே அமைந்திருக்கிறது. கிட்டத்தட்ட 90 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவின் ஏராளமான ராணுவ நடவடிக்கைகள் இங்கு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இங்கு பல தசாப்தங்களாக அணுசக்தி மற்றும் வேதியியல் ஆயுதங்கள் தொடர்பான சோதனைகள் நடத்தப்பட்டிருந்தாலும், சுற்றிலும் கடல் இருப்பதால், தற்போது வரை இந்த பகுதி 14 வெவ்வேறு வெப்பமண்டல பறவைகள் இனங்களுக்கு பாதுகாப்பான புகலிடமாக இருக்கிறது.
அதுமட்டுமின்றி, இது ஒரு unincorporated U.S. territory.. அதாவது, இந்தப்பகுதி, அமெரிக்காவுக்கு சொந்தமான ஒரு நிலப்பகுதிதான். ஆனால், அமெரிக்காவின் அரசியலமைப்புச் சட்டம் அந்த பகுதியில் முழுமையாக அமல்படுத்தப்படுவதில்லை. சுருக்கமாக, அமெரிக்கா நிர்வகிக்கும் ஒரு விதமான காலனி எனலாம்..
இந்தத் தீவில்தான், ஹைப்பர்சோனிக் ராக்கெட்டுகளின் மூலம் சரக்குகளை விநியோகம் செய்வதற்கான புதிய சோதனைத் திட்டத்தை எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அமெரிக்க விமானப்படை மேற்கொள்ள இருந்தது. ஸ்பேஸ் எக்ஸ் உடன் இணைந்துதான் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட இருக்கிறது என்ற வெளிப்படையான அறிவிப்புகள் வரவில்லைதான். ஆனால், இது போன்ற திட்டங்களில் தீவிர ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கும் ஒரு நிறுவனம் என்றால் அது ஸ்பேஸ் எக்ஸ் தான். எனவே, ஸ்பேஸ் எக்ஸ் உடன் இணைந்துதான் அமெரிக்கா இந்தத் திட்டத்தை மேற்கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகின.
அதன்படி, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உருவாக்கும் வணிக ராக்கெட்டுகளைப் பயன்படுத்தி, 90 நிமிடங்களுக்குள் 100 டன் வரையிலான சரக்குப் பொருட்களை பூமியின் எந்த மூலைக்கும் அனுப்புவது சாத்தியமா என்பது குறித்து இந்த சோதனை நடத்தப்பட இருக்கிறது.. இந்த சோதனை வெற்றிபெறும்பட்சத்தில், அது போர் மற்றும் அவசர காலங்களில் பொருட்களையும் படைகளையும் விரைவாக கொண்டு செல்வதற்கான வகையில் ஒரு புரட்சிகரமான திட்டமாக இருக்குமெனக் கருதப்பட்டது. Air Force Research Laboratoryயின் கீழ் இந்தத்திட்டம் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இத்தகைய சூழலில்தான் இந்தத்திட்டம் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதுதொடர்பாக, Reuters செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, இந்தத் திட்டம் அந்த தீவில் வாழும் 14 வகையான வெப்பமண்டலக் கடற்பறவைகளுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என பசுமை ஆர்வலர்களும் உயிரியல் நிபுணர்களும் எச்சரித்திருக்கின்றனர். மேலும், பறவைகள் இனப்பெருக்கம் செய்யும் நேரத்தில், அதிபலமான ராக்கெட்டின் சத்தங்களும், வெடிப்புகளும் பறவைகளின் இனப்பெருக்க சுழற்சிகளை பாதிக்குமெனவும் தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக, சிவப்பு வாலைக் கொண்ட டிராபிக்பேர்டுகள், வெள்ளை டெர்ன்கள் மற்றும் பூபிகள் போன்ற பறவையினங்களுக்கு இருக்கும் குறைவான பாதுகாப்பான இடங்களில் இந்தத் தீவும் ஒன்றாகும். இந்தத் தீவு பாதிக்கப்பட்டால் அந்தப் பறவைகளும் பாதிக்கப்படும் என உயிரியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற கருத்துகள் வெளியான பிறகுதான், விமானப்படை சோதனைகளை நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது. மேலும், அமெரிக்க ராணுவப்பிரிவு செய்தியாளர் ஒருவர் அந்தத் திட்டத்தை செயல்படுத்த வேறு இடங்களைத் தேடிக்கொண்டு இருக்கிறோமென Stars and Stripes இதழிடம் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக, மிட்வே தீவு, வேக் தீவு மற்றும் குவாஜலின் அட்டோல் ஆகியவற்றை உள்ளடக்கிய மாற்று தளங்களை தற்போது பரிசீலிக்கத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க விமானப்படையும் தெரிவித்துள்ளது.
SpaceX நிறுவனத்தையொட்டி இதுபோன்ற கருத்துகள் வெளியிடப்படுவது இது முதன்முறையல்ல... ஸ்டார்ஷிப் ராக்கெட் ஒன்றை டெக்சாஸில் உள்ள போக்கா சிக்கா பகுதியில் ஏவியபோது, piping plover எனும் பாதுகாக்கப்படும் கடலோரப் பறவைகளின் முட்டைகள் மற்றும் கூடுகள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்தாக செய்திகள் வெளியானது. இந்தச் சம்பவம் சுற்றுச்சூழல் குழுக்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பினைச் சந்தித்தது. இதனையடுத்து, “இந்தக் கொடூரமான குற்றத்தினை ஈடுசெய்ய, ஒரு வாரத்திற்கு ஆம்லெட் சாப்பிடுவதைத் தவிர்ப்பேன்” என எலான் மஸ்க் சொன்னது மேலும் விமர்சனங்களை தூண்டியது.
ராக்கெட் கார்கோ திட்டம் புரட்சிகரமான திட்டமாக முன்வைக்கப்பட்ட நிலையில், சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு தற்போது இடைநிறுத்தப்பட்டிருக்கிறது..