ஜோஸ் முஜிகா X
உலகம்

உருகுவேயை மாற்றியமைத்த உலகின் ஏழை அதிபர்.. 89ஆவது வயதில் காலமானார்! யார் இந்த ஜோஸ் முஜிகா?

உருகுவேயின் அதிபரான முன்னாள் கெரில்லா போராளி ஜோஸ் முஜிகா, 89ஆவது வயதில் காலமானார்.

Prakash J

ஒருகாலத்தில் மார்க்சிய கெரில்லாவாகவும், மலர் விவசாயியாகவும் இருந்த உருகுவேயின் முன்னாள் அதிபர் ஜோஸ் முஜிகா, தன்னுடைய 89ஆவது வயதில் காலமானார். கடந்த ஆண்டு, முஜிகாவுக்கு உணவுக்குழாயில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, அதன் பெரும்பகுதி அப்போதே அகற்றப்பட்டது. எனினும், 2025 ஜனவரியில், முஜிகாவின் உணவுக்குழாயில் இருந்த புற்றுநோய் மீண்டும் கல்லீரலுக்குப் பரவியதாக அவரது மருத்துவர் தெரிவித்தார்.

மேலும், அவருடைய மருத்துவப் பிரச்னைகளும் முஜிகாவை ஆட்கொண்டன. இந்த நிலையில், அவர் மரணத்தைத் தழுவினார். அவரை, தன்னுடைய வழிகாட்டி என்று அழைக்கும் உருகுவேயின் அதிபர் யமண்டு ஓர்சி அவரது மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் இடதுசாரி கூட்டணிக்காக பிரசாரம் செய்தவர், முஜிகா. அப்போது ஓர்சியை ஆதரித்து அவர் பிரசாரம் செய்தார். முஜிகாவின் பிரசாரம் ஓர்சியை இன்று அதிபர் நாற்காலியில் அமரவைத்துள்ளது. அதன் காரணமாகவே, முஜிகாவை ஓர்சி, தனது வழிகாட்டி எனக் குறிப்பிட்டுள்ளார். அவரது மரணம் உருகுவே மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஜோஸ் முஜிகா

யார் இந்த ஜோஸ் முஜிகா?

1935ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி மான்டிவீடியோவில் பிறந்த முஜிகா, ஒரு சாதாரண குடும்பத்தில் வளர்ந்தார். சிறு விவசாயியான அவரது தந்தை முஜிகா இளம் வயதிலேயே இறந்துவிட்டார். இதனால் பள்ளிக்கூடக் கல்வியை முடிப்பதற்கு முன்னரே இடதுசாரி அரசியலில் களமிறங்கினார். 1960களில், உருகுவேயின் இராணுவ ஆதரவு ஆட்சியை எதிர்த்துப் போராடிய நகர்ப்புற கெரில்லா குழுவான டுபமரோஸில் சேர்ந்தார். இந்தக் குழு கடத்தல்கள் மற்றும் கொள்ளைகள் உள்ளிட்ட ஆயுதமேந்திய நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதையடுத்து, முஜிகா 1972இல் கைது செய்யப்பட்டார். அவர் 14 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் கழித்தார். அங்கு அவர், கடுமையாகச் சித்திரவதை செய்யப்பட்டார். சிறைவாசம், தனது மனதை மிகவும் பாதித்ததாக முஜிகா பின்னர் கூறினார்.

1985ஆம் ஆண்டு உருகுவேயில் மக்களாட்சி மலர்ந்தபோது அவர் விடுவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணியான பரந்த முன்னணியில் அவர் இணைந்தார். அதன் வாயிலாக முஜிகா நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டு விவசாயத் துறை அமைச்சராகவும் பணியாற்றினார். அவரது வெளிப்படையான பேச்சு மற்றும் கிராமப்புற சமூகங்களுடனான தொடர்புக்காக உருகுவே அரசியலில் அவர் ஒரு முக்கிய நபராக ஆனார். 2009ஆம் ஆண்டு, அவர் அதிபர் பதவிக்கு போட்டியிட்டு, வலுவான ஆதரவுடன் வெற்றி பெற்றார். 2010 முதல் 2015 வரை அவரது தலைமையின்கீழ், உருகுவே கஞ்சா உற்பத்தி மற்றும் விற்பனையை சட்டப்பூர்வமாக்கிய உலகின் முதல் நாடாக மாறியது. போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து லாபத்தைப் பறிக்கவும் வன்முறை குற்றங்களைக் குறைக்கவும் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவதை முஜிகா ஆதரித்தார். மேலும், அவரது அரசாங்கம் ஒழுங்குபடுத்தப்பட்ட நிபந்தனைகளின் கீழ் ஒரே பாலின திருமணம் மற்றும் கருக்கலைப்பை அனுமதிக்கும் சட்டங்களையும் இயற்றியது.

உலகின் ஏழ்மையான அதிபர்

அவர் அதிபராக இருந்தபோதும், ​​அதிபர் மாளிகையில் வசிக்க மறுத்துவிட்டார். அவர் மான்டிவீடியோவிற்கு வெளியே உள்ள தனது பண்ணை வீட்டில் தங்கி, தனது சம்பளத்தின் பெரும்பகுதியை (90 சதவீதம்) தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கினார். அவர் அடிக்கடி வேலைக்குச் சைக்கிளில் சென்று வந்தார். ஒரு பழுதடைந்த வோக்ஸ்வாகன் காரை வைத்திருந்தார். மேலும் முன்னாள் கெரில்லா போராளியும் செனட்டருமான தனது மனைவி லூசியா டோபோலன்ஸ்கியுடன் வசித்து வந்தார். இதன்மூலம், அவரது வாழ்க்கை முறை சர்வதேச ஊடக கவனத்தை ஈர்த்தது. அவர் ’உலகின் ஏழ்மையான அதிபர்’ என்று அறியப்பட்டார். ஆனாலும் அதை அவர் நிராகரித்தார்.

ஜோஸ் முஜிகா

இதுகுறித்து அவர், “நான் 'ஏழை அதிபர்’ என்று அழைக்கப்படுகிறேன். ஆனால் நான் ஏழையாக உணரவில்லை. ஏழை மக்கள் என்பவர்கள் விலையுயர்ந்த வாழ்க்கை முறையைத் தக்கவைத்துக் கொள்ள மட்டுமே வேலை செய்பவர்கள். எப்போதும் அதிகமாக விரும்புபவர்கள்" எனத் தெரிவித்தார். அதுபோல், ஒருகாலத்தில் முஜிகா புரட்சியாளராக இருந்தபோதிலும், தனது கருத்துகளை மாற்றியமைத்தார். பொதுச் சேவைகளுக்கு நிதியளிக்க முதலாளித்துவம் அவசியம் என்றும், மாற்றம் என்பது தற்போதுள்ள அமைப்புகளுக்குள் செயல்பட வேண்டும் என்றும், உண்மையான பிரச்னைகளைத் தீர்ப்பதில் சித்தாந்தம் தலையிடக்கூடாது” அவர் வாதிட்டார்.

அவரது அதிபர் காலத்தில் உருகுவேயின் பொருளாதாரம் விரிவடைந்தது. சீனாவிற்கான ஏற்றுமதிகள் இதற்கு பெரிதும் உதவின. வறுமை குறைந்தது, குறைந்தபட்ச ஊதியம் அதிகரித்தது. பதவியை விட்டு வெளியேறிய பிறகும், முஜிகா காலநிலை மாற்றம் மற்றும் சமத்துவமின்மை போன்ற உலகளாவிய பிரச்னைகள் குறித்து தொடர்ந்து பேசினார். இறப்பதற்கு முன்னால்கூட, வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த முஜிகா, “உண்மையைச் சொன்னால், நான் இறந்து கொண்டிருக்கிறேன். ஒரு போர்வீரனுக்கு ஓய்வெடுக்க உரிமை உண்டு” எனத் தெரிவித்துள்ளார்.