ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருப்பது தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ.) விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், பாகிஸ்தானின் தூண்டுதலின் பேரிலேயே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நிலவுகிறது. தவிர, இருதரப்பிலும் மாறிமாறி கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு, கவுன்சிலின் உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றம் தொடர்பாக விவாதிக்க, பாகிஸ்தானின் கோரிக்கையின் பேரில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு, கவுன்சிலின் உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. சில உறுப்பினர்கள், மத நம்பிக்கையின் அடிப்படையில் சுற்றுலாப் பயணிகள் குறிவைக்கப்பட்டது குறித்து சுட்டிக்காட்டியதாக சொல்லப்படுகிறது.
இந்த கூட்டத்தில், பாகிஸ்தானிடம் கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டதாகவும், பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா, இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளதா என வினவப்பட்டதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் ஏவுகணை சோதனைகள், அணு ஆயுதம் தொடர்பான சொல்லாடல்கள் பதற்றத்தை அதிகரிப்பதாக உறுப்பினர்கள் பலர் கவலை தெரிவித்ததாகவும், இருதரப்பு ரீதியாக பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளுமாறு பாகிஸ்தானுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.