ஈரான் தாக்குதல்கள் Reuters
உலகம்

ஈரானில் அமெரிக்கா ’போர்க்குற்றம்’ நியாயமான காரணங்கள் உள்ளது.. ஐநா வெளியிட்ட அதிரடி அறிக்கை!!

அமெரிக்கா போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக நியாயமான காரணங்கள் உள்ளனென ஐநா உண்மை கண்டறியும் குழு அதிரடி அறிக்கை வெளியிட்டுள்ளது.

Premkumar S

வளைகுடா போரின் முதல் நாளான பிப்ரவரி 28-ம் தேதி ஈரானில் அமெரிக்கப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்தநிலையில் தான், அந்த சம்பவங்களில் அமெரிக்கா போர்க்குற்றங்களில் (War Crimes) ஈடுபட்டது என நம்புவதற்கான, நியாயமான காரணங்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பால் நியமிக்கப்பட்ட ’உண்மை கண்டறியும் குழு’ தெரிவித்திருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

UNO

கடந்த பிப்ரவரி மாதம் ஈரானின் மினாப் நகரில் உள்ள ஷஜரே தாய்பே (Shajareh Tayyebeh) தொடக்கப்பள்ளியில் அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், 120 குழந்தைகள் உட்பட 160-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர். இந்தப் பள்ளி பொதுமக்கள் பயன்படுத்தும் கட்டிடம் என்பது தெளிவாகத் தெரிந்திருந்தும், அமெரிக்கா நடத்திய ஐநா குழு தெரிவித்திருக்கிறது. அதேநாளில், லாமர்ட் நகரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் பொதுமக்கள் 22 பேர் உயிரிழந்திருந்தனர். இந்தநிலையில் தான், அமெரிக்காவின் இவ்விரு தாக்குதல்களும் பொதுமக்களை கவனத்தில் கொள்ளாமல் கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் என ஐநாவின் உண்மை கண்டறியும் குழு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, ஈரானில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் தொடங்கிய அரசுக்கு எதிரான போராட்டங்களை அந்நாட்டு அதிகாரிகள் ஒடுக்கிய விதம் குறித்தும் ஐ.நா. குழு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. சட்டவிரோத கொலைகள், சித்திரவதை, தன்னிச்சையான கைது மற்றும் இணையத் தடைகள் போன்றவை இடம்பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது. ஈரான் அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, போராட்டங்களில் 3,038 பேர் உயிரிழந்ததாகவும், 25 ஆயிரம் பேர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டிருந்தது. ஆனால், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் எனவும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

ஈரான் தாக்குதல்

இவ்வாறு, தங்கள் சொந்த அரசாங்கத்தால் இழைக்கப்படும் கொடூரமான மனித உரிமை மீறல்களுக்கும், அமெரிக்காவின் தாக்குதல்களுக்கும் இடையே பொதுமக்கள் சிக்கியுள்ளதாகவும், உடனடியாகத் தாக்குதல்களை நிறுத்திப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த, 2022-ம் ஆண்டு ஈரானில் நடைபெறும் மனித உரிமைகள் மீறல்களைக் கண்காணிக்க ஐநாவின் மனித உரிமைகள் சபையால் உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவிற்கு, வங்கதேசத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சாரா ஹொசைன் (Sara Hossain) தலைவராக செயல்பட்டு வருகிறார்.