அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற 81-ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் அமைதியாக வெளியேறியது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
அண்டை நாடான பாகிஸ்தானில் கூட்டாட்சி அமைந்துள்ளது. அந்நாட்டின் பிரதமராக ஷெபாஸ் ஷெரீஃப் உள்ளார். இந்த நிலையில்,அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற 81-ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க ஷெபாஸ் ஷெரீஃப் அங்குச் சென்றிருந்தார். அப்போது அவரிடம், ”பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை எப்போது நிறுத்துவீர்கள்” என பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். மேலும், "மும்பை 26/11 தாக்குதல் தொடர்புடைய லஷ்கர்-இ-தொய்பா (LeT) அமைப்பின் தலைவரான ஹபீஸ் சயீத் மீது எப்போது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பீர்கள்” எனக் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், இவை எதற்கும் அவர் பதிலளிக்காமல் சிரித்தபடியே சென்றார். இது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சர்கோதா பகுதியைச் சேர்ந்த ஹபீஸ் முஹமது சயீத், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) நிறுவனராக அறியப்படுகிறார். மும்பையில் கடந்த 2008 நவம்பர் 26 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் வழக்கிலும், 2025 ஏப்ரல் 22 அன்று நடந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் வழக்கிலும் இவர் மிகவும் தொடர்புடையவராக அறியப்படுகிறார். இந்நிகழ்வுக்கு முன்னதாக, ஐ.நா மன்றத்தில் உரையாற்றிய இந்திய தூதரக அதிகாரிகள் பாகிஸ்தானின் இரட்டை நிலைப்பாட்டைக் கடுமையாகச் சாடியிருந்தனர். "பிற நாடுகளின் நிலத்தைக் கைப்பற்றுவதிலும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதிலும் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, கடும் கடன் சுமையில் இருக்கும் பாகிஸ்தான் தனது நாட்டின் பொருளாதாரத்தை மீட்கும் வழியைப் பார்க்க வேண்டும்" என இந்தியா பதிலடி கொடுத்திருந்தது.