காஸா நகரில் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது. 5 லட்சம் மக்கள் பஞ்சத்தில் வாடுவதாகவும், இது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவாகும் எனவும் கூறப்பட்டுள்ளது. இஸ்ரேல் தாக்குதலால் காஸா நகரின் நிலைமை மோசமடைந்துள்ளது. உணவு, மருத்துவம், குடிநீர் உடனடியாக வழங்கப்படாவிட்டால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் இதை நிராகரித்துள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னை என்பது பல தசாப்தங்களாக நீடித்து வரும் நிலையில், காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர், 2023இல் இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 252 பேர் பணயக் கைதிகளாகவும் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இடையில் பேச்சுவார்த்தை ஏற்பட்டு சில நாட்கள் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தாலும், மறுபடியும் அங்கு இன்றுவரை போர் தொடர்கிறது. இதுவரை அங்கு 62,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர். இதற்கிடையே, ஹமாஸ் வசம் உள்ள தங்கள் நாட்டு பிணைக்கைதிகள் 58 பேர் விடுவிக்கப்படும் வரை தாக்குதல்கள் தொடரும் என எச்சரித்துள்ள இஸ்ரேல், காஸாவை தங்கள் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளது.
காஸா சிட்டியில் பஞ்ச நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பஞ்சம் இயற்கைப் பேரிடரால் உருவாக்கப்பட்டதில்லை. முழுக்க முழுக்க மனிதா்களால் உருவாக்கப்பட்டது. இதை உடனடியாக நிறுத்தி, மாற்றியமைக்க முடியும்.ஐ.நா. அறிக்கை
அதேநேரத்தில், இஸ்ரேலின் தாக்குதலால் நிலைகுலைந்து போயிருக்கும் காஸா நகரம், பஞ்சத்தின் பிடியில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு பெற்ற நிறுவனமான ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு கட்ட வகைப்பாடு (IPC) தெரிவித்துள்ளது. இதுகுறித்து அது வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஸா சிட்டியில் பஞ்ச நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பஞ்சம் இயற்கைப் பேரிடரால் உருவாக்கப்பட்டதில்லை. முழுக்க முழுக்க மனிதா்களால் உருவாக்கப்பட்டது. இதை உடனடியாக நிறுத்தி, மாற்றியமைக்க முடியும். இதுதொடா்பான விவாதங்களுக்கு நேரம் முடிந்துவிட்டது. நகரில் தற்போது கொடிய பசிப் பிணி வேகமாகப் பரவி வருகிறது. காஸா சிட்டிக்கு பெரிய அளவிலான மனிதாபிமான உதவிகள் உடனடியாக தேவைப்படுகிறு. இன்னும் ஒரு நாள் தாமதித்தாலும், பஞ்சத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு உயரும். போா் நிறுத்தம் அமலாக்கப்படாமல், காஸா முழுவதும் உணவு, மருத்துவம், ஊட்டச்சத்து, குடிநீா், சுகாதார சேவைகள் உடனடியாக வழங்கப்படாமல் இருந்தால், தவிா்க்கப்படக்கூடிய உயிரிழப்புகள் பன்மடங்கு உயரும்” என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பகுதியில் நிலவும் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாட்டின் தீவிரத்தை மூன்று முக்கிய அளவுகோல்களைக் கொண்டு ஆய்வு செய்து, அந்தப் பகுதியில் பஞ்ச நிலையை ஐபிசி அறிவித்துள்ளது. பஞ்ச நிலையை அறிவிக்க, குறிப்பிட்ட பகுதியில் குறைந்தது 20 சதவீத குடும்பங்கள் முழுமையான உணவுப் பற்றாக்குறையை எதிா்கொள்ள வேண்டும். 30 சதவீத குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட வேண்டும். மேலும் ஒவ்வொரு 10,000 பேருக்கும் இரண்டு போ் பசியால் தினமும் இறக்க வேண்டும். இந்த அளவுகோல்கள் தற்போது காஸா சிட்டியில் பூா்த்தியாகியுள்ளன. இது, அந்த நகரின் நிலவி வரும் மனிதாபிமான நெருக்கடி பேரழிவு நிலையை அடைந்துள்ளதை வெளிப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதைவைத்தே, காஸாவில் மட்டும் 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பஞ்சத்தில் இருப்பதாக அது தெரிவித்துள்ளது. தற்போதுள்ள சூழலே நீடிக்கும் பட்சத்தில் டெய்ர் அல்பாலா மற்றும் கான் யூனிஸ் பகுதிகளும் அடுத்த மாதத்தில் இதே நிலைக்கு தள்ளப்படும் எனவும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 15 வரை சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 5,00,000 எண்ணிக்கையானது, செப்டம்பர் மாத இறுதிக்குள் கிட்டத்தட்ட 6,41,000 மக்களாக - மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காக - அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 15 வரை சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 5,00,000 எண்ணிக்கையானது, செப்டம்பர் மாத இறுதிக்குள் கிட்டத்தட்ட 6,41,000 மக்களாக - மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காக - அதிகரிக்கும்ஐ.நா.
ஐபிசி என்பது, உணவு நெருக்கடிகள் குறித்த உலகின் முன்னணி அதிகாரமிக்க ஓர் அமைப்பு ஆகும். இது ஐ.நா.வின் சுகாதாரம், மேம்பாடு மற்றும் உணவு உதவி நிறுவனங்கள்; தொண்டு நிறுவனம் கேர் இன்டர்நேஷனல்; பஞ்ச முன்னெச்சரிக்கை அமைப்புகள் நெட்வொர்க்; மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலக வங்கி உள்ளிட்ட கிட்டத்தட்ட இருபது குழுக்களின் நிபுணர்களைக் கொண்டுள்ளது. இந்த அமைப்புகளைச் சேர்ந்த 50 நிபுணர்கள் நடத்திய ஆய்விற்குப் பின்னரே காஸா நகரம் பஞ்சத்தின் பிடியில் இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு, சூடானின் வடக்கு டார்பூரின் சில பகுதிகளில் பஞ்சம் தொடர்ந்து நிலவுவதாக நிபுணர்கள் தெரிவித்தனர். 2011ஆம் ஆண்டில் சோமாலியாவும், 2017ஆம் ஆண்டில் தெற்கு சூடானும் பஞ்சத்தைக் கண்டன. தற்போது இந்தப் பட்டியலில் காஸா சேர்க்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், “காஸாவில் வாழும் நரகத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. இது, ஒரு மர்மம் அல்ல. மாறாக. மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு, ஒரு தார்மீக குற்றச்சாட்டு மற்றும் மனிதகுலத்தின் தோல்வி. பஞ்சம் என்பது உணவைப் பற்றியது மட்டுமல்ல; அது மனித உயிர்வாழ்வதற்குத் தேவையான அமைப்புகளின் வேண்டுமென்றே சரிவு" என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
காஸாவில் வாழும் நரகத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. இது, ஒரு மர்மம் அல்ல. மாறாக. மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுஅன்டோனியோ குட்டெரெஸ், ஐ.நா. பொதுச் செயலாளர்
ஐ.நா உதவித் தலைவர் டாம் பிளெட்சர், "இஸ்ரேலின் திட்டமிட்ட தடைகள் காரணமாக பாலஸ்தீனப் பகுதிக்கு உணவு செல்ல முடியவில்லை. பஞ்சம் நம் அனைவரையும் வேட்டையாட வேண்டும். எங்களை அனுமதித்திருந்தால் நாங்கள் தடுத்திருக்கக்கூடிய ஒரு பஞ்சம் இது. ஆனாலும் இஸ்ரேலின் திட்டமிட்ட தடைகளால் எல்லைகளில் உணவு குவிந்து கிடக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், காஸா பகுதியில் 98 சதவீத விளைநிலங்கள் சேதமடைந்திருப்பதாகவும், கால்நடைகள் அழிக்கப்பட்டு மீன்பிடித்தல் தடைசெய்யப்பட்டிருப்பதாகவும், இதன் காரணமாக சுகாதார அமைப்பு கடுமையாக மோசமடைந்திருப்பதாகவும், ஐபிசி தெரிவித்துள்ளது. ஆனால், இந்த அறிக்கையை இஸ்ரேல் நிராகரித்துள்ளது. காஸாவில் பஞ்சம் இல்லை என்றும் அது தெரிவித்துள்ளது.