நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேர விருப்பம் தெரிவித்ததால் அந்நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்தது. ஏறத்தாழ 3 ஆண்டுகளை கடந்து இந்த போர் நீடிக்கிறது. போரில் இரு நாடுகளுமே சரிசமமாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அணிதிரண்டன.
குறிப்பாக உக்ரைனுக்கு கடந்த ஜோ பைடன் ஆட்சிக்காலத்தில் அமெரிக்கா ஆயுதங்களை வாரி வழங்கியது. பின்னர், அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதும் உக்ரைன்- ரஷ்யா போருக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு தீவிர முயற்சி மேற்கொண்டார். இதன் காரணமாக ஒரு சில முறை போர் நிறுத்த ஒப்பந்தமும் அமலுக்கு வந்தது. இதற்கிடையே உக்ரைனுக்கு அமெரிக்கா இதுவரை அளித்து வந்த ஆயுத உதவிகளுக்கு பதிலாக அந்நாட்டில் உள்ள அரிய வகை கனிமங்கள் மற்றும் தாதுக்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என டொனால்ட் டிரம்ப் நிபந்தனை விதித்தது உக்ரைனுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.
இருப்பினும், நாட்டில் அமைதியை கொண்டுவர வேண்டுமாயின், இழந்த பொருளாதார சேதங்களை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டுமாயின் அமெரிக்காவின் உதவி உக்ரைனுக்கு தேவைப்பட்டது. எனவே, டொனால்ட் டிரம்ப்பின் வேண்டுகோளுக்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்து வந்த உக்ரைன், அமெரிக்காவுக்கு தங்கள் நாட்டின் கனிம வளங்களை கொடுப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தநிலையில், அமெரிக்கா உடனான கனிமவள ஒப்பந்தத்திற்கு, உக்ரைன் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. பொதுவாக மசோதா நிறைவேற 226 வாக்குகள் தேவைப்படும் நிலையில், நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில், 338 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். கனிமவள ஒப்பந்தத்திற்கு எதிராக உறுப்பினர்கள் யாரும் வாக்களிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போரால் உருக்குலைந்த உக்ரைனை மீண்டும் கட்டமைப்பதற்கு அமெரிக்கா முதலீடுகளை செய்வது என்றும், அதற்கு கைமாறாக, உக்ரைனின் அரியவகை கனிமவளங்களை விற்பனை செய்வதன் மூலமாக கிடைக்கும் லாபத்தை அமெரிக்காவுக்கு பகிர்ந்தளிப்பது என்றும், இந்த ஒப்பந்தத்தின்படி முடிவு செய்யப்பட்டுள்ளது.