இந்தியா - பாகிஸ்தான் போர் | ”தலையிட மாட்டோம்” - அமெரிக்க துணை அதிபர்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, ’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், இந்தியா தாக்குதலைத் தொடங்கி பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம், இந்தியா மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை வீசிப் நேற்று இரவு முதல் போரைத் தொடங்கியது. இதையடுத்து, இந்தியா அதற்குத் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருவதுடன், பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் ட்ரோன்களை வழிமறித்து தகர்த்து வருகிறது.
இந்த நிலையில், ”இந்தியா-பாகிஸ்தான் மோதலில் தலையிடமாட்டோம்” என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர், “பதற்றத்தைத் தணிக்க இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என நாங்கள் வலியுறுத்துவோம். ஆனால், இந்தப் போரில் அமெரிக்கா தலையிடாது. ஏனென்றால், அடிப்படையில் இது நமது பிரச்னை அல்ல. அமெரிக்காவின் திறனால் பிரச்னையைக் கட்டுப்படுத்துவதற்கு இதில் தொடர்பு இல்லை. இந்தியா, ஆயுதத்தைக் கைவிடவேண்டுமென அமெரிக்காவால் கூற முடியாது. ’ஆயுதத்தை கைவிடுங்கள்’ என்று பாகிஸ்தானிடமும் கூற முடியாது. ராஜாங்கரீதியில் பிரச்னையை தீர்க்க முயற்சி மேற்கொள்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.