Ukraine - Russia war  web
உலகம்

10 நாட்களில் 136 கப்பல்கள்.. உக்ரைன் ட்ரோன் வேட்டை.. நிலைகுலைந்த ரஷ்யா!

மோதல்கள் தீவிரமடைந்து வருவதால், வணிகக் கப்பல்கள் மீதான உக்ரேனிய மற்றும் ரஷ்யத் தாக்குதல்களில் உயிரிழக்கும் மாலுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

PT WEB

2022 முதல் நீடிக்கும் போரில், ட்ரோன் பயன்பாட்டில் முன்னணியில் உள்ள உக்ரைன், 2024இல் தனி ஆளில்லாப் படையை அமைத்து, ரஷ்யாவின் கருங்கடல் கடற்படையையும் நிழல் கப்பல் படையையும் குறிவைத்து தாக்கியுள்ளது. ஜூலை 6-15 வரை 136 கப்பல்களைத் தாக்கி, எண்ணெய்-எரிவாயு கப்பல்களைச் சேதப்படுத்தி, ரஷ்யாவின் ஏற்றுமதி வருவாயை முடக்கியுள்ளது.

செய்தியாளர் ; M. மீரா

2022 முதல் நீடிக்கும் ரஷ்யா-உக்ரைன் போரில், போர்முனையில் ட்ரோன்களைப் பயன்படுத்துவதில் உலகளவில் உக்ரைன் முன்னணியில் உள்ளது. 2024இல் இதற்கென தனி இராணுவப் பிரிவை (Unmanned Systems Forces) உருவாக்கிய முதல் நாடாக உக்ரைன் உள்ளது. இந்த ட்ரோன்கள் ரஷ்யாவின் கருங்கடல் கடற்படையைப் பின்வாங்கச் செய்துள்ளன.

Russia - Ukraine war

ரஷ்யாவின் பொருளாதார முதுகெலும்பாக விளங்கும் நிழல் கப்பல் படை (Shadow Fleet) மீது மிகக் கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளது உக்ரைன். கடந்த 10 நாட்களில் அதாவது, ஜூலை 6 முதல் ஜூலை 15 வரையில் - உக்ரைனின் ஆளில்லா வான்வழி மற்றும் கடல்வழி ட்ரோன் படைகள் (Unmanned Systems Forces) சுமார் 136 ரஷ்யக் கப்பல்களைக் குறிவைத்துத் தாக்கியுள்ளது.

ஜூலை 14ஆம் தேதி இரவில் மட்டும் உக்ரைன் இராணுவம் கருங்கடலில் மேற்கொண்ட ஒரு பெரிய அளவிலான ட்ரோன் நடவடிக்கையின் மூலம், 17 எண்ணெய் மற்றும் 2 எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மற்றும் ஓர் இழுவைக் கப்பல் (tugboat) உட்பட 20 ரஷ்யக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

உக்ரைனின் இந்தத் தொடர் அதிரடித் தாக்குதல்களால் நிலைகுலைந்து போன ரஷ்யா, அசோவ் கடலையும் டான் நதியையும் இணைக்கும் மிக முக்கியப் பாதையான ‘டான்-அசோவ் கால்வாயை’ (Don-Azov Channel) தற்காலிகமாக மூடியுள்ளது.

மேலும், கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யாவுடன் இணைக்கும் கெர்ச் நீர்ச்சந்தியும் (Kerch Strait) முற்றிலும் முடக்கியுள்ளதால், கிரிமியாவில் உள்ள ரஷ்யப் படைகளுக்கான எரிபொருள் மற்றும் தளவாட விநியோக வழித்தடங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் ரஷ்யாவின் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் அதன்மூலம் கிடைக்கும் வருவாயை முற்றிலும் முடக்குவதே உக்ரைனின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.

Russia - Ukraine war

உக்ரைனுக்குப் பதிலடியாக ரஷ்யா தனது ஏவுகணைகளைக் கொண்டு உக்ரைனின் ஒடேசா (Odesa) மற்றும் சோர்னோமோர்ஸ்க் (Chornomorsk) துறைமுகங்கள் மீது தாக்குதல் நடத்திவருகிறது. உலகின் பலம்வாய்ந்த வான் பாதுகாப்பு அமைப்புகளைக் கொண்டிருந்தும், உக்ரைனின் நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ஒரேநேரத்தில் கண்டறிந்து அழிக்க முடியாமல் ரஷ்யா திணறி வருகிறது.