செய்தியாளர் - ராஜ்குமார். ர
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த 2022-ஆம் ஆண்டு தொடங்கிய போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்தப் போரின் ஒரு பகுதியாக, உக்ரைனின் மின் உற்பத்தி நிலையங்கள், துணை மின் நிலையங்களைக் குறிவைத்து ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால், உக்ரைனின் மின்சாரக் கட்டமைப்பு பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, குளிர்காலத்தில் மின்சாரத் தேவை அதிகரிக்கும் சூழலில், மின்சாரக் கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் உக்ரைனின் அணுமின் நிலையங்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளன.
இந்நிலையில், ஐரோப்பிய அணுசக்தி மற்றும் கதிர்வீச்சுப் பாதுகாப்பு தொடர்பான அமைப்புகளான HERCA, WENRA, NORA ஆகியவை இணைந்து முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளன. அதில், உக்ரைனின் அணுசக்திப் பாதுகாப்புக்கு ரஷ்யாவின் தொடர் தாக்குதல்கள் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகக் கவலை தெரிவித்துள்ளன. மேலும், உக்ரைனின் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாகச் செயல்படுவதற்குத் தேவையான மின்சாரக் கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன. அணுமின் நிலையங்களுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டு, மாற்று மின்சார வசதிகளும் செயலிழந்தால் மிகப்பெரிய அணுசக்தி விபத்து ஏற்படக்கூடும் என்றும் எச்சரித்துள்ளன.
இதற்குக் காரணம், அணுமின் நிலையங்களில் அணுக்கருப் பிளவு மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்போது அதிக அளவில் வெப்பம் உருவாகிறது. அணு உலை பாதுகாப்பாகச் செயல்படுவதற்கு இந்த வெப்பத்தைக் கட்டுப்படுத்துவதும், தொடர்ந்து குளிர்விப்பதும் மிகவும் அவசியம். இதற்காகப் பயன்படுத்தப்படும் குளிரூட்டும் அமைப்புகள் இயங்குவதற்கு மின்சாரம் தேவைப்படுகிறது. ஒருவேளை வெளிப்புற மின்சார விநியோகம் தடைப்பட்டு, அவசரகால மாற்று மின்சார வசதிகளும் செயலிழந்தால், அணு உலையைக் குளிர்விப்பதில் சிக்கல் ஏற்படலாம். இதனால் அணு உலையின் வெப்பநிலை அதிகரித்து, அணு எரிபொருள் உருகும் நிலை ஏற்படக்கூடும். அப்படி நிகழ்ந்தால் கதிரியக்கப் பொருட்கள் சுற்றுச்சூழலில் வெளியேறும் அபாயம் உள்ளது. இதைத்தான் அணுசக்திப் பாதுகாப்பு அமைப்புகள் மிகப்பெரிய ஆபத்தாகச் சுட்டிக்காட்டியுள்ளன.
ஏற்கனவே, கடந்த 1986-ஆம் ஆண்டு உக்ரைனில் உள்ள செர்னோபில் அணுமின் நிலையத்தில் நிகழ்ந்த விபத்து, உலக வரலாற்றிலேயே மிக மோசமான அணுசக்தி விபத்துகளில் ஒன்றாகப் பதிவாகியுள்ளது. அந்த விபத்தின்போது வெளியான கதிரியக்கப் பொருட்கள் உக்ரைன் மட்டுமின்றி அண்டை நாடுகளான பெலாரஸ், ரஷ்யா மற்றும் ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்தின. இந்நிலையில், பல தசாப்தங்களுக்குப் பிறகு உக்ரைனின் அணுமின் நிலையங்கள் மீண்டும் போர் காரணமாகப் பாதுகாப்பு அச்சுறுத்தலைச் சந்தித்து வருவது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.