Putin & Zelensky  web
உலகம்

ரஷ்யாவை வீழ்த்த பலே திட்டம்.. புதிய கேடயத்தை உருவாக்கும் உக்ரைன்.. ’பிரேயா’ என்றால் என்ன?

ஷ்ய ஏவுகணைகளை வீழ்த்த ’பிரேயா’ என்ற பெயரில் புதிய கேடயத்தை உருவாக்க உக்ரைன் திட்டமிட்டுள்ளது.

Prakash J

நேட்டோ நாடுகளில் இணையக்கூடாது என்பதற்காக உக்ரைன் மீது ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் போர் தொடுத்தது. அது இன்றுவரை நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்கு எதிராக உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், ரஷ்ய ஏவுகணைகளை வீழ்த்த ’பிரேயா’ என்ற பெயரில் புதிய கேடயத்தை உருவாக்க உக்ரைன் திட்டமிட்டுள்ளது. அதாவது, ரஷ்யாவின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களைச் சமாளிப்பதற்காகவும், அமெரிக்காவின் விலையுயர்ந்த 'பேட்ரியாட்' ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளுக்கு மாற்றாகவும், உக்ரைன் அறிமுகப்படுத்தியுள்ள புதிய ஐரோப்பியக் கூட்டு வான் பாதுகாப்புத் திட்டமே 'பிரேயா' (Freya) கேடயமாகும்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற கூட்டத்தில், உக்ரைனின் இந்தத் திட்டத்திற்கு ஆதரவு பெருகியுள்ளது. டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, நார்வே, ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய 9 ஐரோப்பிய நாடுகள் இணைந்து ஒரு 'பாஸ்டிக் ஏவுகணைத் தடுப்புக் கூட்டணியை' ஏற்படுத்தி, 'பிரேயா' திட்டத்தை விரைவுபடுத்த ஒப்புதல் அளித்துள்ளன. இந்தத் திட்டத்தின் முதற்கட்ட சோதனைகள் மற்றும் செயல்பாடுகளைத் விரைவில் நடைமுறைப்படுத்த உக்ரைன் மற்றும் அதன் கூட்டாளி நாடுகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.

அமெரிக்காவின் பேட்ரியாட் PAC-3 ஏவுகணைத் தடுப்பு அமைப்பின் ஒருமுறை ஏவுதலுக்கு சுமார் 3.8 மில்லியன் டாலர்கள் செலவாகும் நிலையில், 'பிரேயா' அமைப்பின் மூலம் ஏவப்படும் ஓர் ஏவுகணைக்கு தோராயமாக $700,000 மட்டுமே செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இது போர்க்களத்தில் பொருளாதாரரீதியான அழுத்தத்தைக் குறைக்க உதவும் எனக் கூறப்படுகிறது. உக்ரைனைச் சேர்ந்த 'ஃபயர் பாயிண்ட்' என்ற பாதுகாப்புத் தளவாட நிறுவனம் இந்தத் திட்டத்திற்குத் தலைமை தாங்கி உருவாக்குகிறது. சோவியத் யூனியன் காலத்து எஸ்-300 மற்றும் எஸ்-400 அமைப்புகளில் பயன்படுத்தப்பட்ட ஏவுகணைத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில், நவீன கார்பன் ஃபைபர் மற்றும் புதிய உக்ரைனிய திட எரிபொருளைக் கொண்டு இதன் FP-7.x ரக ஏவுகணைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த ஏவுகணைகள் மணிக்கு சுமார் 1,500 முதல் 2,000 மீட்டர் வேகத்தில் பாய்ந்து சென்று எதிரிகளின் பாலிஸ்டிக் ஏவுகணைகளை நடுவானில் அழிக்கும் திறன் கொண்டவை. ஐரோப்பிய நாடுகளின் ரேடார்கள் மற்றும் கட்டுப்பாட்டு மையங்களுடன் எளிதில் ஒருங்கிணைக்கக் கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, நார்வே போன்ற நாடுகளின் ரேடார் மற்றும் கட்டளை மையங்களுடன் இது இணைக்கப்படவுள்ளது.